அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த 3ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் போட்டியிட்டார். தேர்தல் முடிந்து உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. எலக்ட்டோரல் காலேஜ் வாக்குகளில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 264 இடங்களைக் கைப்பற்றி முன்னிலையில் இருக்கிறார்.
குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் 214 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறார். தற்போது பென்சில்வேனியா, ஜார்ஜியா மாநிலங்களிலும் ஜோ பைடன் முன்னிலையில் உள்ளதால், அவர் அதிபராவது உறுதியாகியுள்ளது. இதற்கிடையே, வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி, 5 மாநிலங்களில் டிரம்ப்பின் குடியரசு கட்சியினர் வழக்குத் தொடுத்துள்ளனர். மேலும், ஜோ பைடன் வெற்றியை டிரம்ப் ஏற்றுக் கொள்ளவேயில்லை.
இந்நிலையில், டிரம்ப்பின் தலைமை அதிகாரியான மார்க் மெடோஸுக்கு கொரோனா பாதித்துள்ளது. இதை அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளார். தேர்தல் முறைகேடு குற்றச்சாட்டுத் தொடர்பாக டிரம்ப்பின் சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வந்த மெடோஸ், தற்போது கொரோனா பாதிப்பில் சிகிச்சைக்குச் சென்றுள்ளார்.அவருக்கு கொரோனா அறிகுறி மட்டும்தானா, வைரஸ் நோயே பாதித்துள்ளதா என்று அறிவதற்காகப் பத்திரிகையாளர்கள் வெள்ளை மாளிகை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு விசாரித்தனர். ஆனால், அதற்குச் சரியான பதில் கிடைக்கவில்லை. மெடோஸ் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட மெயில்களுக்கும் பதில் கிடைக்கவில்லை.