பிரபல மலையாள நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சாட்சியை மிரட்டியது கேரளாவைசேர்ந்த ஆளும் கட்சியை சேர்ந்த எம்எல்ஏவின் செயலாளர் என தெரியவந்துள்ளது.பிரபல மலையாள நடிகை கடந்த 3 வருடங்களுக்கு முன் திருச்சூரில் இருந்து கொச்சிக்கு காரில் செல்லும் போது வழியில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக அந்த நடிகையிடம் டிரைவராக பணி புரிந்த சுனில் குமார் என்பவர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் மலையாள முன்னணி நடிகர் திலீப் தான் இதற்கு சதித்திட்டம் தீட்டினார் என தெரியவந்தது. இதையடுத்து திலீபையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே இந்த வழக்கு பாதிக்கப்பட்ட நடிகையின் கோரிக்கையை ஏற்று தற்போது எர்ணாகுளத்தில் ஒரு பெண் நீதிபதி தலைமையிலான தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விசாரணை நீதிமன்றம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாக கூறி போலீஸ் தரப்பு மற்றும் அரசுத்தரப்பு சார்பிலும், பாதிக்கப்பட்ட நடிகை சார்பிலும் கேரள உயர் நீதிமன்றத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த மனுக்கள் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, விசாரணை நீதிபதிக்கு எதிராக அரசு தரப்பு கடும் குற்றச்சாட்டுகளை கூறியது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக நீதிமன்றம் செயல்படுவதால் விசாரணையை நிறுத்திவைத்து வேறு நீதிமன்றத்திற்கு விசாரணையை மாற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணையை வரும் 16ம் தேதி வரை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இதற்கிடையே இந்த வழக்கில் முக்கிய சாட்சியான ஒருவருக்கு போனில் மிரட்டல் வந்ததாக தகவல் வெளியானது.
இது குறித்து அந்த நபர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்த விசாரணையில் சாட்சியை மிரட்டியது யார் என தற்போது தெரியவந்துள்ளது. அந்த நபர் கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த ஒரு ஆளுங்கட்சி எம்எல்ஏவின் அலுவலக செயலாளர் என போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு முன்பும் இவர் பலமுறை சாட்சிகளை மிரட்டியதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த நபருக்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளனர். தன்னுடைய செயலாளரை காப்பாற்ற அந்த எம்எல்ஏ கடும் முயற்சி எடுத்து வருவதாக கூறப்படுகிறது.