அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜே பைடன் வெற்றி பெற்றதை தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால், வெள்ளை மாளிகை நிர்வாகப் பொறுப்புகள் மாற்றும் பணி தடைப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் 3ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடனும் போட்டியிட்டனர்.
தேர்தல் முடிந்து உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கி 6 நாட்களாக நடைபெற்று வருகிறது. கொரோனா அச்சம் காரணமாகப் பல லட்சம் மக்கள் மெயில் ஓட்டு எனப்படும் தபால் வாக்குகளைப் பதிவு செய்திருந்தனர். அவற்றை எண்ணுவதில்தான் பென்சில்வேனியா, ஜார்ஜியா, நெவேடா, மிக்சிகன், அரிசோனா ஆகிய முக்கிய மாநிலங்களில் தாமதம் ஏற்பட்டது.
அதே சமயம், மொத்தம் உள்ள 538 எலக்டோரல் ஓட்டுகளில் மெஜாரிட்டிக்கு 270 ஓட்டுகளைப் பெற வேண்டும். ஜோ பைடன் இது வரை 290 எலக்டோரல் ஓட்டுகளைப் பெற்று விட்டார். கடந்த 7ம் தேதி இரவு அவர் 270ஐ தாண்டியதும் அவரது வெற்றி உறுதியாகி விட்டது. அவர் தனது வெற்றியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார். எனினும், சில மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடிவடையவில்லை. முடியும் போது ஜோ பைடன் 300 எலக்டோரல் ஓட்டுகளைத் தாண்டக் கூடும். இதற்கிடையே, டிரம்ப் மற்றும் அவரது குடியரசு கட்சியினர் ஐந்தாறு மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இது ஒரு புறமிருக்க டிரம்ப் தனது தோல்வியை இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. இத்தனைக்கும் இந்தியா, இங்கிலாந்து, கனடா, இத்தாலி என்று உலக நாடுகளின் பிரதமர்கள், ஜோ பைடனுக்கு வாழ்த்து தெரிவித்து, புதிய அதிபரை அங்கீகரித்துள்ளனர்.இந்நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு எதிராக டிரம்ப் பல ட்விட்களை போட்டுள்ளார். அதில், இன்னும் தேர்தல் நடைமுறை முடியவில்லை. அனைத்து வாக்குகளும் நேர்மையான முறையில் எண்ணி முடிக்கும் வரை நான் ஓய மாட்டேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். ஓரிரு இடங்களில் நடந்த மறுவாக்கு எண்ணிக்கையைப் பெரிதாகச் சித்தரித்தும் அவர் கருத்து பதிவிட்டிருக்கிறார்.
அமெரிக்காவில் புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் வெள்ளை மாளிகை நிர்வாகம் மற்றும் கூட்டாட்சி நிர்வாகப் பொறுப்புகளை மாற்றும் பணி உடனடியாக நடைபெறத் தொடங்கும். அது முடிவதற்கு ஓரிரு மாதங்களாகும்.தற்போது புதிய அதிபர் ஜோ பைடன், அடுத்த ஆண்டு ஜனவரி 20ம் தேதி பதவியேற்க உள்ளார். அவருடன் துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராகப் பொறுப்பேற்கிறார். இன்னும் 78 நாட்கள் இருந்த போதிலும், டிரம்ப் நிர்வாகம் பொறுப்புகளை ஒப்படைக்கும் பணியை இது வரை தொடங்காமல் நிறுத்தி வைத்துள்ளது.
டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக் கொள்ளாததால், பொறுப்புகளை மாற்றும் பணி தாமதம் ஆகலாம் என்று சொல்லப்படுகிறது. எனினும், அதிபர் நிர்வாக மாற்றம் தொடர்பாக 57 ஆண்டு பழமையான சட்டம் உள்ளது. அதன்படி, பொதுப் பணி நிர்வாகத்தின் தலைமை அதிகாரி செயல்பட்டாக வேண்டும் என்றும் கூறப்படுகிறது.