கோவிலுக்குள் புகுந்த கொள்ளையர்களை பிடித்த தெரு நாய்

by Nishanth, Nov 9, 2020, 12:07 PM IST

கொள்ளையடிப்பதற்காகக் கோவிலுக்குள் புகுந்த 4 கொள்ளையர்களைத் தெருநாய் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் கேரள மாநிலம் வயநாட்டில் நடந்துள்ளது.கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ளது கேணிச்சிறை என்ற கிராமம். இந்த கிராமத்தில் உள்ள பூதாடி என்ற இடத்தில் மஹா சிவன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்குத் தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காகச் செல்வது வழக்கம்.

இந்த கோவிலைச் சுற்றிலும் 9 அடி உயரத்திற்கு காம்பவுண்டு சுவர் உள்ளது. இக்கோவிலின் தலைமை பூசாரி கோவில் வளாகத்தில் உள்ள வீட்டில் தான் தங்கியுள்ளார். இக்கோவிலில் புராதனமான சிலைகள் உள்ளன. ஊரை ஒட்டியே இருப்பதால் இக்கோவிலுக்குப் பாதுகாவலர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. அப்பகுதியைச் சேர்ந்த தெரு நாய்கள் தான் இந்த கோவிலைக் காவல் காத்து வருகின்றன. இரவாகி விட்டால் அங்குள்ள தெருநாய்கள் கோவிலைச் சுற்றிலும் படுத்துக் கொள்ளும். ஊர் மக்கள் அல்லாமல் இரவு நேரத்தில் கோவில் அருகே யாராவது சென்றால் அவர்களை இந்த நாய்கள் விரட்டியடித்து விடும்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கோவில் அருகே இருந்த தெருநாய்கள் விடாமல் குரைத்துக் கொண்டிருந்தன. நீண்ட நேரமாக நாய்கள் குரைத்துக் கொண்டிருந்ததால் தூக்கத்திலிருந்து எழுந்த கோவில் தலைமை பூசாரி வெளியே வந்து பார்த்தார். அப்போது 4 பேர் கோவில் வளாகத்திற்குள் நிற்பது தெரியவந்தது. அவர்களைப் பார்த்ததும் பூசாரி அதிர்ச்சி அடைந்தார். உடனே அந்தக் கும்பலைச் சேர்ந்த ஒருவன் கத்தியைக் காட்டி பூசாரியை மிரட்டினான். இந்த சமயத்தில் நாய்கள் குரைக்கும் சத்தத்தைக் கேட்டு ஊர் மக்களும் அங்குத் திரண்டு வந்தனர்.

ஆட்கள் வருவதைப் பார்த்ததும் அந்த கொள்ளைக் கும்பல் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்தது. ஆனால் அனைவரும் விரட்டிச் சென்று 4 பேரையும் மடக்கிப் பிடித்தனர். இது குறித்து கேணிச்சிறை போலீசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று 4 பேரையும் கைது செய்தனர். தெரு நாய்கள் குரைத்திருக்காவிட்டால் கோவிலில் இருக்கும் புராதனமான சிலைகளும், உண்டியல் மற்றும் நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருக்கும் என்றும் அப்பகுதியினர் தெரிவித்தனர்.

You'r reading கோவிலுக்குள் புகுந்த கொள்ளையர்களை பிடித்த தெரு நாய் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை