8 மாதத்துக்கு பிறகு சினிமா தியேட்டர்கள் நாளை திறப்பு.. டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்..

by Chandru, Nov 9, 2020, 12:01 PM IST

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் அமெரிக்கா, இந்தியா என உலக நாடுகள் முழுவதும் பரவியது. பல்வேறு நாடுகளில் சேர்த்துப் பலி எண்ணிக்கை கோடியைத் தொட்டது. இந்தியாவில் லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். இதையடுத்து கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 8 மாதமாக தியேட்டர்கள் மூடப்பட்டிருந்தன.

சினிமா படப் பிடிப்பு உள்ளிட்ட மற்ற பணிகளுக்கு அனுமதி அளித்தும் தியேட்டர்கள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. தியேட்டர் அதிபர்கள் மத்திய மாநில அரசுக்கு தியேட்டர் திறக்க அனுமதி கேட்டு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து கடந்த அக்டோபர் 15ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. மற்ற மாநிலங்களில் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் தமிழகத்தில் அனுமதி கிடைக்கவில்லை.

தமிழ்நாடு திரை அரங்கு மல்டி பிளக்ஸ் சங்க கவுரவ தலைவர் அபிராமி ராமநாதன் தலைமையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தியேட்டர் திறக்க அனுமதி கோரினர். அவர் அதை ஏற்று நவம்பர் 10ம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் திறக்க அனுமதி அளித்தார். அதன்படி நாளை தமிழகம் முழுவதும் தியேட்டர்கள் திறக்கப்படவுள்ளன. முன்னதாக அனைத்து தியேட்டர்களும் மருந்து தெளிக்கப்பட்டு தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.சென்னையில் உள்ள பி வி ஆர் அண்ட் எஸ்பிஐ திரையரங்குகள் டிக்கெட்கள் முன் பதிவு தொடங்கி உள்ளதாக அறிவித்திருக்கிறது. அதேபோல் வேலூர், கோவையிலும் டிக்கெட் முன்பதிவு நடக்கிறது. அரசு விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டுப் பாதுகாப்பு முக கவசம் அணிந்து ரசிகர்கள் அனைவரையும் வரவேற்பதாக தியேட்டர்கள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மாஸ்டர், ஜெகமே தந்திரம் உள்ளிட்ட பிளாக் பஸ்டர் படங்கள் திரைக்கு வர தயாராக உள்ளன. ஆனால் அவை வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம் தியேட்டர் அதிபர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் புதிய படங்கள் ரிலீஸ் செய்வதில் மோதல் ஏற்பட்டுள்ளது. விபிஎப் கட்டணத்தை செலுத்தாவிட்டால் புதிய படங்களை ரிலீஸ் செய்ய மாட்டோம் என்று பாரதிராஜா தலைமையிலான தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்திருக்கிறது. ஆனால் அதைத் திரை அரங்கு உரிமையாளர்கள் ஏற்கவில்லை.

தீபாவளி நெருங்கி வரும் நிலையில் இந்த மோதல் திரையுலகுக்கு ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது. ஆனாலும் எம்ஜிஆர் மகன், களத்தில் சந்திப்போம், இரண்டாம் குத்து போன்ற படங்கள் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.8 மாதத்துக்குப் பிறகு தியேட்டர்கள் திறக்கப்படுவதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

You'r reading 8 மாதத்துக்கு பிறகு சினிமா தியேட்டர்கள் நாளை திறப்பு.. டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை