கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி மும்பை நகரைக் குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தியாவின் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் முக்கிய நகரான மும்பையில் ஒரே நேரத்தில் பல இடங்களில் தீவிரவாதிகள் மூன்று நாட்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தினர். கடல் வழியே மும்பைக்குள் நுழைந்த பத்து தீவிரவாதிகளால் 166 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். சர்வதேச தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் இதற்கான விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால், வழக்கில் எந்தவொரு நகர்தலும் இல்லை. காரணம், பாகிஸ்தான் தரப்பிலிருந்து எந்தவொரு ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை. இதுநாள் வரையில் மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் என்ன சம்பந்தம் என பாகிஸ்தான் கேட்பது போலவே அதன் செயல் இருந்தது.
இதற்கிடையே, மும்பையில் தாக்குதலுக்கு உதவிய 11 தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருப்பதை பாகிஸ்தானின் உயர்மட்ட விசாரணை ஆணையமான மத்திய புலனாய்வு அமைப்பு (எப்ஐஏ) ஏற்றுக்கொண்டு இருக்கிறது. இந்த அமைப்பு தற்போது 1,210 தேடப்படும் தீவிரவாதிகள் குறித்து ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. பட்டியலில், மும்பை தாக்குதலூக்காக படகுகளில் வந்த 9 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள், சாஹிவால் மாவட்டத்தைச் சேர்ந்த முஹம்மது உஸ்மான், சர்கோதா மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் ஷகூர், லாகூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதீக்-உர்-ரெஹ்மான், முஹம்மது சபீர் லோத்ரான் மாவட்டம், ஹபீசாபாத்தைச் சேர்ந்த ரியாஸ் அகமது, குஜ்ரான்வாலா மாவட்டத்தைச் சேர்ந்த முகமது முஷ்தாக், தேரா காசி கான் மாவட்டத்தைச் சேர்ந்த முஹம்மது நயீம்,ரஹீம் யார்கான் மாவட்டத்தைச் சேர்ந்த ஷாகில் அகமது ஆகியோர் தான். இந்த 9 பேருமே ஐ.நா. பட்டியலிடப்பட்ட தீவிரவாத குழுவில் இருக்கின்றனர். மேலும் இவர்கள் அனைவருமே லஷ்கர் இ தொய்பா உறுப்பினர்கள்.