அமெரிக்காவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்க உள்ள ஜோ பிடனுடன் பிரதமர் மோடி தொலைப்பேசியில் பேசினார்.அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் 3ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடனும் போட்டியிட்டனர். தேர்தல் முடிந்து உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கி ஒரு வாரத்திற்கும் மேலாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
கொரோனா அச்சம் காரணமாகப் பல லட்சம் மக்கள், மெயில் ஓட்டு எனப்படும் தபால் வாக்குகளைப் பதிவு செய்திருந்தனர். அவற்றை எண்ணுவதில்தான் பென்சில்வேனியா, ஜார்ஜியா, நெவேடா, மிக்சிகன், அரிசோனா ஆகிய முக்கிய மாநிலங்களில் தாமதம் ஏற்பட்டது. முடிவில், ஜோ பிடன் அமோக வெற்றி பெற்றார். ஆனால், டிரம்ப் மற்றும் அவரது குடியரசு கட்சியினர் ஐந்தாறு மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, வழக்கு தொடர்ந்தனர்.
டிரம்ப் தனது தோல்வியை ஏற்றுக் கொள்ளவும் இல்லை. இதற்கிடையே, இந்தியா, இங்கிலாந்து, கனடா, இத்தாலி என்று உலக நாடுகளின் பிரதமர்கள், ஜோ பைடனுக்கு வாழ்த்து தெரிவித்து, புதிய அதிபரை அங்கீகரித்துள்ளனர்.இந்நிலையில், ஜோ பிடனுடன் பிரதமர் மோடி தொலைப்பேசியில் பேசினார். அப்போது, இருநாடுகளும் தொடர்ந்து நல்லுறவை மேம்படுத்த வேண்டும் என்று மோடி விருப்பம் தெரிவித்தார். கோவிட்19, பருவநிலை மாறுபாடு, இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் கூட்டு நடவடிக்கைகள் உள்ளிட்ட விஷயங்களில் இருநாடுகளும் இணைந்து செயல்பட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
ஜோ பிடனும் இந்த விஷயங்களில் தமது விருப்பத்தைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், பிரதமர் மோடி பேசுகையில், அமெரிக்காவின் துணை அதிபராகக் கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குத் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். அவரது வெற்றி, இந்திய அமெரிக்கர்களுக்கு மிகவும் பெருமை சேர்ப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். ஜோ பிடனுடன் பேசியது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.