பலாத்காரம் செய்பவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்டத்தை இயற்றப் பாகிஸ்தான் அரசு தீர்மானித்துள்ளது. பலாத்காரம் செய்பவர்களின் பாலுணர்வைத் துண்டிக்கும் அவசரச் சட்டத்தைக் கொண்டுவர பாக்.பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்தியாவைப் போலவே பாகிஸ்தானிலும் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பலாத்கார சம்பவங்களும் இங்கு அதிக அளவில் நடைபெற்று வருகின்றன.
பலாத்கார குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீண்ட காலமாகப் பாகிஸ்தானில் உள்ள பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில் பாக். பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பலாத்கார குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு நடவடிக்கை எடுக்க அவசர சட்டம் கொண்டுவரத் தீர்மானிக்கப்பட்டது.
இதுகுறித்து பாக். பிரதமர் இம்ரான் கான் கூறியது: நாட்டின் குடிமகன்கள் அனைவருக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அரசின் கடமையாகும். இதன்படி பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் சட்டம் கொண்டு வரத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் அவசரச் சட்டம் பிறப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் மிகத் தெளிவாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் இருக்கும். இதன் படி பலாத்கார குற்றங்களில் ஈடுபடுபவர்களின் பாலுணர்வு துண்டிக்கப்படும். பாதிக்கப்படுபவர்கள் தைரியமாகப் புகார் செய்ய முன் வரவேண்டும். அவர்களது பெயர் மற்றும் விவரங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும்.
இது மிகவும் மோசமான விஷயம் என்பதால் இந்த குற்றங்கள் தொடர்பான நடவடிக்கைகளைத் தாமதம் ஆவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பலாத்கார வழக்கு விசாரணையில் பெண்களின் பங்கை அதிகரிக்க வேண்டும். அப்போது தான் இந்த வழக்கில் விரைவில் விசாரணை நடத்த முடியும். சாட்சிகளுக்கு உரியப் பாதுகாப்பு அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஆனால் இதுவரை இந்த அவசரச் சட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.