கோவிட்-19 பரவலால் உலகம் முழுவதும் விழாக்கள், கொண்டாட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கூட்டமாக சேர பல நாடுகளில் தடை உள்ளன. தற்போது டிசம்பர் மாதம் நெருங்கி வரும் நிலையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கேள்விக்குறியாகியுள்ளது. பிரிட்டனில் கிறிஸ்துமஸ் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகையாகும். அங்கு கொரோனா இரண்டாம் அலை குறித்த எச்சரிக்கை எழுந்துள்ளது.
ஃபாதர் கிறிஸ்துமஸ் எனப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா, சிறு பிள்ளைகளுக்கு வெகுமதி அளிப்பவர். கிறிஸ்துமஸையும் கிறிஸ்துமஸ் ஃபாதரையும் பிரித்தறிய இயலாது. கிறிஸ்துமஸ் பண்டிகையின் உற்சாகத்திற்கு கிறிஸ்துமஸ் தாத்தாவே முக்கிய காரணம். இந்நிலையில் பிரிட்டனில் மாண்டி என்ற 8 வயது சிறுவன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜாண்சனுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளான்.
"இந்த கிறிஸ்துமஸுக்கு ஃபாதர் கிறிஸ்துமஸ் வருவாரா? தின்பண்டங்களோடு சானிடைசர் வைத்தால் வரலாமா? அவர் அடிக்கடி கைகளை கழுவிக்கொள்ளலாமா? நீங்கள் அதிக பிசியாக இருப்பீர்கள் என்று தெரியும். ஆனாலும், இதை நீங்களும் விஞ்ஞானிகளும் சற்று யோசியுங்கள்" என்று எழுதியுள்ளான்.
அந்தக் கடிதத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ள பிரிட்டன் பிரதமர், தாம் மாண்டிக்கு எழுதியுள்ள கடிதத்தையும் பதிவிட்டுள்ளார்.
"மாண்டி, இதேபோன்று லட்சக்கணக்கான சிறுவர் சிறுமியர் விரும்புகின்றனர். நான் தலைமை மருத்துவ அதிகாரியுடன் பேசினேன். ஃபாதர் கிறிஸ்துமஸ் வழக்கம்போல் வரலாம். தின்பண்டங்களுடன் சானிடைசர் வைக்கலாம் என்று உன் யோசனை வரவேற்கத்தக்கது" என்று அவர் எழுதியுள்ளார்.