டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் பிரச்சனையில் அமெரிக்கா தலையிட வேண்டும் என இந்திய வம்சாவளி எம்.பி உள்ளிட்ட 7 அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் 31-வது நாளாகத் தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு நடத்திய 5 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ளது. மேலும், 6-ம் கட்ட பேச்சுவார்த்தையை வரும் டிசம்பர் 29-ம் நடத்தத் தயாராகவுள்ளதாக விவசாயிகள் சங்கங்கள் அறிவித்துள்ளது.
இதற்கிடையே, விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினர் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் குரல் எழுப்பி வருகின்றனர். விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாக்கக் கனடா எப்போதும் துணை நிற்கும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். இதற்கு இந்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில், போராடி வரும் விவசாயிகள் பிரச்சனையில் அமெரிக்கா தலையிட வேண்டும் வலியுறுத்தி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், தமிழகத்தைப் பூர்விகமாக கொண்ட அமெரிக்க எம்பியான பிரமிளா ஜெயபால் உள்ளிட்ட 7 அமெரிக்க எம்.பிக்கள் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பேயோவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
பிரமிளா ஜெயபால் தனது கடிதத்தில், இந்திய விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை, அமெரிக்காவில் குடியேறி வரும் பல இந்தியர்களுக்கு நேரடியாகப் பாதிப்பு ஏற்படுத்தும். அமெரிக்க வாழ் இந்தியர்களின் பலரின் குடும்ப உறுப்பினர்கள் பஞ்சாப் மாநில பகுதிகளில் வசித்து வருகிறார்கள். இந்த இந்தியர்களில் பலருக்கும் அந்தப் பகுதிகளில் பூர்வீகச் சொத்துகள் உள்ளன. விவசாயிகள் போராட்டத்திற்கு தீர்வுக்கான இந்திய அரசுக்கு அமெரிக்கா ஆலோசனை வழங்கலாம். எனவே, டெல்லியில் போராடும் விவசாயிகள் போராட்டத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும். இதுதொடர்பாக, வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பேயோ, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் பேச வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.