குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தியா வருவதாக தெரிவித்திருந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ஜனவரி 26-ம் தேதி அன்று நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பை ரத்து செய்யுமாறு பிரதமர் மோடியை மீண்டும் கேட்டுக் கொள்கிறேன் என்றும் அதே போல் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பயணத்தை ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்என்றும் பதிவிட்டிருந்தார். சுப்ரமணியம் சாமியின் இந்தப்பதிவு டெல்லி வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதே சமயம் இதற்கு அரசு தரப்பில் எந்த ரியாக்ஷனும் இல்லை. ஆனால் அதே சமயம் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்தியா வருகை ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தியா வருவதாக ஏற்கனவே போரிஸ் ஜான்சன் தெரிவித்திருந்த நிலையில் இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வேகமாக பரவி வருவதால், ஜான்சன் வருகை ரத்து செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது . இங்கிலாந்து பிரதமரின் வருகை ரத்து செய்யப்பட்டதற்கு கொரோனா ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும் சுப்பிரமணிய சுவாமியின் டுவிட்டர் பதிவும் ஒரு காரணம் எனவும் டெல்லி வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.