10 நாளில் கொரோனா தடுப்பு ஊசி ஆதார் அடையாள அட்டை கட்டாயம்

by Nishanth, Jan 5, 2021, 20:46 PM IST

இந்தியாவில் 10 நாட்களுக்குள் கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடங்கும் என்றும், தடுப்பூசிக்கு ஆதார் அடையாள அட்டை கட்டாயம் வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத் துறை செயலாளர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பாரத் பயோடெக் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் நாடு முழுவதும் தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டது. இந்த ஒத்திகை மிகவும் வெற்றிகரமாக இருந்ததாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. முதல்கட்டமாக டாக்டர்கள், நர்சுகள் உட்பட சுகாதாரத் துறை ஊழியர்கள், போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி விநியோகிப்பதற்கான இறுதிக்கட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு மாநிலத்திற்கும் எப்படி அனுப்புவது, எங்கு இருப்பு வைப்பது என்பது உட்பட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் 10 நாட்களுக்குள் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கும் என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் டெல்லியில் கூறியது: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி விநியோகிக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளது. அடுத்த 10 நாட்களுக்குள் தடுப்பூசி விநியோகிக்கும் பணிகள் தொடங்கிவிடும்.

அந்தந்த மாவட்ட அதிகாரிகள் இடம், மற்றும் நேரத்தை தீர்மானித்து கொள்ளலாம். தடுப்பூசி போட வருபவர்கள் கண்டிப்பாக ஆதார் அடையாள அட்டை கொண்டு வர வேண்டும். தற்போது நாட்டில் நோய் பரவல் குறைந்து வருகிறது. 2.5 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 44 சதவீதம் பேருக்கு மட்டுமே பல்வேறு உடல்நலக் கோளாறுகள் உள்ளன. 56 சதவீதம் பேருக்கு நோய் அறிகுறிகளோ, வேறு சுகாதார பிரச்சினைகளோ இல்லை. சென்னை, கொல்கத்தா, மும்பை மற்றும் கர்னால் ஆகிய 4 இடங்களில் தடுப்பூசிகள் இருப்பு வைக்கப்படும். 37 இடங்களில் தடுப்பூசியை இருப்பு வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

You'r reading 10 நாளில் கொரோனா தடுப்பு ஊசி ஆதார் அடையாள அட்டை கட்டாயம் Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை