டிரம்பிற்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் இந்திய கொடியை வைத்திருந்ததற்கு போராட்டத்தில் ஈடுபட்ட வின்சென்ட் சேவியர் விளக்கம் அளித்துள்ளார். அமெரிக்க அதிபராக ஜொ பைடன் கடந்த ஜனவரி 6-ம் தேதி அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தில் நடத்திய பேரணி கலவரமாக மாறியது. இதில் 3 பேர் பலியாகினர். இந்த வன்முறைக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதற்கிடையே, கலவரத்தில் வின்சென்ட் சேவியர் என்பவர் இந்தியக் கொடியுடன் பங்கேற்றார். இது குறித்து வின்சென்ட் சேவியர் கூறுகையில், தேசப்பக்தியுடனே பேரணிக்கு சென்றதாகவும், இந்தியக் கொடியை பயன்படுத்தியதற்கு வருந்தவில்லை என்று தெரிவித்தார். இதில் வெட்கப்பட ஒன்றுமில்லை, நாங்கள் எங்கள் பன்முகத்தன்மையைக் கொண்டாடுகிறோம். பலராலும் சித்தரிக்கப்படுவது போல அமெரிக்கா இனவெறி நாடு அல்ல என்பதை உலகம் அறிந்து கொள்ள வேண்டும். குடியரசுக் கட்சி வெள்ளை மேலாதிக்கவாத கட்சி அல்ல என்பதையும் உலகம் அறிந்து கொள்ள வேண்டும். அவர்கள் இனவெறியர்களாக இருந்தால், அவர்கள் இந்தியக்கொடியை அனுமதிக்க மாட்டார்கள். உண்மையில் குடியரசுக்கட்சி எங்கள் மீது அதிக மரியாதை காட்டுகிறது என்று தெரிவித்தார்.
மேலும், ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தீவிர ஆதரவாளர் என்று தெரிவித்த சேவியர், கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர். மேலும், ஜனாதிபதி ஏற்றுமதி கவுன்சில் உறுப்பினராக இருந்தார். டிரம்ப் பேரணிக்கு தேசப்பற்றுடன் சென்றதாகவும், சில குற்றவாளிகள்கேபிட்டலுக்குள் நுழைந்ததாகவும் அதனாதான் கலவரம் உருவானது என்றும் தெரிவித்தார்.
இது எந்த வகையிலும் இந்தியக் கொடியை அவமதிப்பதாக இல்லை, நான் இந்தியாவை நேசிக்கிறேன், எனது வம்சாவளியைப் பற்றி நான் பெருமிதம் கொள்கிறேன். எனது இந்திய அமெரிக்க வம்சாவளியை சுமப்பதுடன், குடியரசுக் கட்சியில் இந்திய அமெரிக்கர்களின் செய்தித் தொடர்பாளராகவும் இருப்பது எனது முழுப் பொறுப்பாக கருதுகிறேன். மற்ற நாடுகளைச் சேர்ந்த அமெரிக்கர்களின் அதே ஆர்வத்தை நான் காட்டுகிறேன். கொடியை ஏந்திய எனது முடிவுக்கு நான் வருத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார்.