அமெரிக்காவில் கலவரத்தில் ஈடுபட்ட அதிபர் டிரம்ப்பின் 70,000 ஆதரவாளர்களின் கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது. அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டிரம்ப் தோல்வியடைந்தார். புதிய அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன் வரும் 20-ம் தேதி பதவியேற்கவுள்ளார். இதற்கிடையே, கடந்த 6-ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு அருகே போராட்டத்தில ஈடுபட்டிருந்த நிலையில் திடீரென நாடாளுமன்றத்திற்குள் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டனர்.
இதில், 5 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்றம் மீது வன்முறை தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து, கலவரத்திற்கு தொடர்புடைய டிரம்ப்பின் ஆதரவாளர்கள் 70,000-க்கும் மேற்பட்ட கணக்குகளை நிறுத்திவைத்ததாக டுவிட்டர் நிறுவனம் நேற்று அறிவித்தது. இது தொடர்பாக டுவிட்டர் நிறுவனம் கூறுகையில், வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்துகளை பதிவிட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கணக்கை நிரந்தரமாக முடக்கிய சிறிது நேரத்திலேயே, டுவிட்டர் சமூக வலைப்பின்னல் அதன் தூய்மைப்படுத்தலைத் தொடங்கியது.
கடந்த 8-ம் தேதி முதல் மேற்கொண்ட முயற்சிகளின் காரணமாக 70,000 க்கும் மேற்பட்ட கணக்குகள் இடை நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு தனி நபர் பல கணக்குகளை தொடங்கி பல நிகழ்வுகளையும் கண்டு பிடித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் முகநூல் மற்றும் டுவிட்டர் கணக்குகளை காலவரையின்றி நிறுவனங்கள் நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.