பீஜிங்: அருணாசலபிரதேசத்தில் இந்திய நிலத்தில் 4.5 கி.மீட்டரில் கிராமம் அமைத்த சீனா நியாயப்படுத்தி உள்ளது. அருணாசலபிரதேசத்தின் எல்லையோர பகுதிகளில் அவ்வப்போது சீனா ஆக்கிரமிப்பு செய்து வருகிறது. இந்நிலையில், அருணாசலபிரதேசம் சுபான்ஸ்ரீ மாவட்டத்தில் உள்ள டிசாரி சூ ஆற்றங்கரையோரத்தில் சீனா 101 வீடுகளை கொண்ட ஒரு புதிய கிராமத்தையே கட்டி முடித்துள்ளது. இந்திய பகுதியுடன் கூடிய சுமார் 4.5 கி.மீட்டரில் இந்த கிராமம் அமைந்துள்ளது. இந்த தகவல், அமெரிக்காவைச் சேர்ந்த இமேஜிங் நிறுவனமான பிளானட் லேப்ஸ் வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் படங்கள் அடிப்படையில் தெரியவந்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்த இடத்தில் வீடுகள் கட்டுவதற்கான எந்த செயல்பாடும் தென்படவில்லை. ஆனால், கடந்த ஆண்டு நவம்பர் மாத செயற்கைகோள் படத்தில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எல்லை அருகில் இந்தியா அதிகமான கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறது. ராணுவத்தை குவித்து வருகிறது என சீனா குற்றம்சாட்டியிருந்தது. ஆனால், தற்போது சீனா கட்டியுள்ள கிராமம் அருகில் இந்தியா எந்தவொரு கட்டமைப்பையும் உருவாக்கவில்லை. இந்தியாவின் பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் அனைத்து முன்னேற்றங்களையும் அரசாங்கம் தொடர்ந்து கண்காணிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங் கூறுகையில், சீன பிரதேசத்தில் சட்டவிரோதமாக நிறுவப்பட்ட அருணாச்சல பிரதேசம் என்று நாங்கள் ஒருபோதும் கருவில்லை. சீனாவின் வளர்ச்சி மற்றும் நடவடிக்கைகள் எங்கள் சொந்த எல்லைக்குள் இயல்பானது. சீனாவின் சொந்த நிலப்பரப்பில் இயல்பான கட்டுமானம் முற்றிலும் இறையாண்மையின் விஷயம் என்று தெரிவித்துள்ளார்.