புதிய அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று, நிலவிலிருந்து எடுத்து வரப்பட்ட சிறிய பாறையை வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் காட்சி படுத்த நாசா ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் கடந்த 20-ம் தேதி பதவியேற்றார். அதிபராக பதவியேற்றது முதல் ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். முன்னதாக, முன்னாள் அதிபர் டிரம்ப் ஓவல் அலுவலக மேசையில் உருவாக்கி வைத்த கோக் பட்டனை அகற்றினார்.
இந்நிலையில், ஜோ பிடன் நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று 1972-ம் ஆண்டில் நிலவிலிருந்து எடுத்து வரப்பட்ட 332 கிராம் எடையுள்ள ஒரு சிறிய பாறையை ஓவல் அலுவலகத்தில் காட்சிக்கு வைக்க நாசா ஒப்புதல் அளித்துள்ளது. நிலவில் காலடி வைத்த கடைசி மனிதர்களான அப்பல்லோ 17 விண்வெளி வீரர்கள், ஒரு சிறிய பாறை மாதிரியை நிலவின் டாரஸ்-லிட்ரோ பள்ளத்தாக்கிலுள்ள வடக்கு மாசிஃப்பின் அடிவாரத்தில் உள்ள ஒரு பெரிய கற்பாறையிலிருந்து கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பாறை 3.9 பில்லியன் ஆண்டுகள் பழமையான மாதிரியாகும். இந்த துண்டு நிலவின் அருகாமையில் கடைசியாக பெரிய தாக்க நிகழ்வின் போது உருவாக்கப்பட்டது என ஆய்வு முடிவில் கண்டறியப்பட்டது. முந்தைய தலைமுறையினரின் லட்சியங்கள் மற்றும் சாதனைகளை அடையாளமாக அங்கீகரிக்கும் விதமாக நிலவின் பாறை இப்போது ஓவல் அலுவலகத்தில் வைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்படுகிறது.