உலகில் கொரோனா நோயை பரப்பும் 4,000 உருமாறிய வைரஸ்கள் உள்ளன என்று இங்கிலாந்து அமைச்சர் நதிம் சஹாவி கூறியுள்ளார். ஆனால் அவற்றில் பெரும்பாலானவை அதிக ஆபத்து இல்லாதவை என்று அவர் தெரிவித்துள்ளார். உலகில் இதுவரை கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 10.5 கோடியை தாண்டிவிட்டது. இந்த நோய் பாதித்து இதுவரை உலகில் 22,94, 862 பேர் மரணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் தான் நிலைமை தொடர்ந்து மோசமாக இருக்கிறது. இங்கு இதுவரை 4.67 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்நோய் பாதித்து பலியாகியுள்ளனர்.
பிரேசிலில் 2.29 லட்சத்திற்கும் மேற்பட்டோரும், மெக்சிகோவில் 1.63 லட்சத்திற்கும் மேற்பட்டோரும், இந்தியாவில் இதுவரை 1.54 லட்சத்திற்கும் மேற்பட்டோரும் மரணமடைந்துள்ளனர். பல நாடுகளில் தற்போது கொரோனாவின் 2வது அலை வீசி வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருவது மக்களிடையே மேலும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இது ஏற்கனவே பரவியுள்ள வைரசை விட 70 சதவீதம் வேகத்தில் பரவும் என்று தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இங்கிலாந்தில் மீண்டும் லாக் டவுன் அமல்படுத்தப்பட்டது.
இந்த உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியா உட்பட மேலும் பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அமைச்சர் நதிம் சஹாவி கூறியது: கொரோனா பரவ காரணமாகக் கூடிய 4,000 உருமாறிய வைரஸ் உலகில் இருக்கிறது. இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இது தெரியவந்துள்ளது. ஆனால் இதில் பெரும்பாலானவை மனிதர்களுக்கு அதிகமாக ஆபத்தை ஏற்படுத்தாதவையாகும். எனவே எந்த உருமாறிய வைரசையும் பரவாமல் தடுக்கும் வகையில் தடுப்பு மருந்து தயாரிக்கப்பட வேண்டும். பல தொற்று நோய்களை இங்கிலாந்து வெற்றிகரமாக கட்டுப்படுத்தி உள்ளது. எனவே கொரோனா வைரசையும் இங்கிலாந்து விரைவில் முறியடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.