மீண்டும் கொரோனா பரவுகிறது வளைகுடா நாடுகளில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

by Nishanth, Feb 5, 2021, 13:44 PM IST

மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருவதை தொடர்ந்து குவைத், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் நிபந்தனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வந்ததை தொடர்ந்து துபாய், குவைத், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பொது இடங்களில் பொது மக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகளும் படிப்படியாக தளர்த்தப்பட்டு வந்தன. இந்நிலையில் சவுதி, குவைத், கத்தார் உள்பட வளைகுடா நாடுகளில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து இந்த நாடுகளில் நிபந்தனைகளை மீண்டும் கடுமையாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குவைத்தில் வெளிநாட்டினருக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் 7ம் தேதி முதல் இரண்டு வாரங்களுக்கு இந்த தடை ஏற்படுதப்பட்டுள்ளது.

மேலும் இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மால்கள் உள்பட வணிக வளாகங்கள் எதுவும் செயல்படக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் மருந்து கடைகள், உணவுப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் ஓட்டல்கள் மற்றும் அரங்கங்களில் நடைபெறும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் உள்துறை தற்காலிக தடை விதித்துள்ளது. நேற்று இரவு 10 மணி முதல் இந்த புதிய கட்டுப்பாடு இங்கு அமலுக்கு வந்துள்ளது. திருமண நிகழ்ச்சிகளுக்கு 1 மாதமும், கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு 10 நாட்களும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சினிமா தியேட்டர்கள், பொழுதுபோக்கு மையங்கள் மற்றும் உணவு சாலைகளில் செயல்படும் விளையாட்டு மையங்கள் அனைத்தையும் மூட சவுதி அரசு உத்தரவிட்டுள்ளது. ஓட்டல்களில் நடைபெறும் கார்ப்பரேட் கூட்டங்களுக்கு 1 மாதத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நோய் மேலும் அதிகரித்தால் இந்த தடை நீட்டிக்கப்படும் என கூறப்படுகிறது. பொது நிகழ்ச்சிகளில் அடுத்த 10 நாட்களுக்கு அதிகபட்சமாக 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும். கடந்த பிப். 2ம் தேதி முதல் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்பட 20 நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டினருக்கு சவுதி அரேபியா தடை விதித்திருந்தது. ஆனால் இந்த நாடுகளில் இருந்து வரும் சவுதி அரேபியாவை சேர்ந்த குடிமகன்கள், வெளியுறவுத் துறை அதிகாரிகள், சுகாதார துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆகியோர் கொரோனா நிபந்தனைகளை பின்பற்றி தங்களது நாட்டுக்கு வரலாம் என்று சவுதி அரேபிய அரசு தெரிவித்திருந்தது. மேலும் மெக்கா, மதீனா ஆகிய இடங்களுக்கு செல்பவர்களுக்கும் கொரோனா நிபந்தனை கடமையாக்கப்பட்டுள்ளது.

இதேபோல ஐக்கிய அரபு அமீரக நாடுகளிலும் நிபந்தனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. பிப்ரவரி 28ம் தேதி வரை ஓட்டல்களில் 70 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி உண்டு. பார்கள், பப்புகள் ஆகியவை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. துபாய்க்கு வரும் எல்லா பயணிகளும் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழை ஆஜர்படுத்த வேண்டும். கத்தாரில் நேற்று முதல் திருமணங்கள் உட்பட எல்லா நிகழ்ச்சிகளுக்கும் கட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 80 சதவீதம் ஊழியர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். 20 சதவீத ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய வேண்டும். அலுவலக கூட்டங்களில் 15 பேருக்கு மேல் கலந்து கொள்ளக் கூடாது. பொதுப் போக்குவரத்திலும் இங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

You'r reading மீண்டும் கொரோனா பரவுகிறது வளைகுடா நாடுகளில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு Originally posted on The Subeditor Tamil

More Special article News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை