அட்லாண்டாவிலுள்ள ஸ்டார்பக்ஸ் உணவகத்தில், கழிப்பறையில் காமிரா மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக 25 வயது பெண் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். காமிராவை கண்டுபிடித்த பெண், அதை உணவகத்தின் மேலாளரிடம் கொடுத்தபோது அவர், தலைமை அலுவலகத்திற்கு அது குறித்து தெரிவிப்பதாக கூறினாராம். அப்பெண் காவல்துறையினரை அழைக்கும்படி வலியுறுத்திய பின்னரே மேலாளர் அது குறித்து புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. கைப்பற்றப்பட்ட அந்த காமிராவில் சில வீடியோ பதிவுகள் இருந்ததாக தெரிகிறது.
விசாரணை தொடர்ந்து வருவதாகவும், இதுவரைக்கும் யாரையும் சந்தேகிக்க முடியவில்லை எனவும் தெரிவித்த அல்பர்ட்டா காவல் அதிகாரி ஹோவர்ட் மில்லர், "நமக்குச் சொந்தமில்லாத இடங்களில் கழிப்பறை, ஓய்வறைகளை பயன்படுத்தும்போது, காமிரா மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என உறுதி செய்து கொள்வது மிகவும் அவசியம்," எனவும் கூறினார்.
இது தங்களை மட்டும் பொறுத்த விஷயமல்ல என்றாலும், இதற்கு தீர்வு காண்பதில் தாங்கள் முழு மனதோடு பங்காற்றுவோம் என்று ஸ்டார்பக்ஸ் தலைமை செயல் அதிகாரி கெவின் ஜாண்சன் செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பிலடெல்பியா ஸ்டார்பக்ஸில் கறுப்பினத்தவர்கள் இருவர் கைது செய்யப்பட்டது பிரச்னையானதை தொடர்ந்து, தனது பணியாளர்களுக்கு வரும் மே மாதம் 29-ம் தேதி, இனப்பாகுபாடு குறித்த பயிற்சி அளிக்க இருப்பதாக ஸ்டார்பக்ஸ் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.