கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா கிரிக்கெட் அணியில் விளையாடி வரும் யுவராஜ் சிங், தனது ஓய்வு குறித்து முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.
2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடக்கும் உலக கோப்பைக்குப் பின்னர் தனது ஓய்வு குறித்து முடிவெடுக்கப் போவதாக யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
2011-ம் நடந்த உலக கோப்பையில் நட்சத்திர வீரராக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். ஆனால், 2017-ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக விளையாடியதே அவரின் கடைசி போட்டியாக இருக்கிறது.
இந்நிலையில், `2019-ம் ஆண்டு வரை என்னால் முடிந்த அளவு திறமையை வெளிப்படுத்தி கிரிக்கெட் விளையாடுவேன். அதன் பிறகு எனது ஓய்வு குறித்து முடிவெடுப்பேன்’ என்று தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் அணி குறித்து பேசும்போது யுவராஜ், `எங்கள் பிரதான இலக்கு முதல் நான்கு இடங்களில் வருவதுதான். எங்களிடம் இந்த ஆண்டு திறமையான அணி இருக்கிறது. வலுவான பேட்டிங்கும் புத்திசாலித்தனமான பௌலர்களும் இந்த ஆண்டு எங்கள் அணியில் இருப்பதால், அடுத்தச் சுற்றுக்கு முன்னேறுவோம் என நம்புகிறோம்.
அதையடுத்து இறுதிப் போட்டியிலும் வெற்றிபெற முயல்வோம்’ என்றார் நம்பிக்கையுடன். பஞ்சாப் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கிறிஸ் கெய்லுக்கு புகழாரம் சூட்டியுள்ளார் யுவி. மேலும், இந்த ஆண்டு சென்னையும் கொல்கத்தாவும்தான் தங்கள் அணிக்கு போட்டியாக இருக்கும் என்றும் ஆருடம் கூறியுள்ளார்.
மேலும், `டி20 கிரிக்கெட்டை கணிக்க முடியாது. யார் வேண்டுமானாலும் இதில் வெற்றி பெறலாம். ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்ச்சியாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதேபோல, கொல்கத்தா அணியும் திறம்பட ஆடி வருகின்றனர். இந்த இரண்டு அணியும் ஐபிஎல்-ஐப் பொறுத்தவரை பெஸ்ட் அணிகள் என நினைக்கிறேன்’ என்றார் நிறைவாக.