திருமண நிகழ்ச்சி ஒன்றில் பணியாளராக பணியாற்றிய பெண் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்துள்ளார். மணமகளின் மாமியார் உடையில் கிரேவி கொட்டிய சம்பவம் தான் அது. இந்த சம்பவத்தால் அவருக்கு கிடைத்த வெகுமதியோ ஆச்சரியமானது.
சோலி பி (chloe beeee) என்பவர் டிக்டாக்கில் தனது வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். அவர் ஒரு தீவிரமான டிக்டாக் யூசர். ஒரு திருமணத்தில் வெய்ட்டாராக பணிபுரிந்தபோது, அவர் மிகவும் பதற்றத்தோடு இருந்ததை நினைவு கூர்ந்தார். மேலும் டிஸ்ப்ராக்ஸியா காரணமாக அடிக்கடி கையில் எடுத்துச் செல்லும் பொருட்களை கீழே தவறிவிடுவேன் என்றும் தன்னுடைய பிரச்னையை டிக்டாக் வீடியோவில் வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் தன்னால் நடந்த ஒரு பயங்கரமான சம்பத்தையும் பகிர்ந்துகொண்டார். புதுமணத் தம்பதியரின் முக்கியமான நாளை தான் முற்றிலும் சிதைத்து விட்டதாக எண்ணி வருந்தியுள்ளார். அதன் பிறகு என்ன நடந்தது என்பதை அவர் சொல்லும் போது நமக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. அவ்வளவு வேடிக்கையாக இருக்கிறது.
இது தொடர்பாக அவர் ஒரு நிமிட வீடியோ கிளிப்பில் பேசியிருக்கிறார். அதில் அவர், தான் பணியாற்றிய முதல் திருமணத்தில், தற்செயலாக மணமகனின் தாயின் மீது முழு கிரேவியையும் கொட்டியுள்ளார்.
மேலும் அந்த கிரேவி மிகவும் சூடாக இருந்ததாகவும், அது மணப்பெண்ணின் மாமியார் உடையில் அனைத்து இடங்களிலும் சிதறியதாகவும் கூறினார். ஆனால் அதிர்ஷ்டவசமாக, அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும் இரு குடும்பங்களும் உள்ளூர் என்பதால் மணமகனின் தாய் உடை மாற்றுவதற்காக அருகில் இருக்கும் தனது வீட்டிற்குச் சென்றுள்ளார்.
திருமண நிகழ்ச்சியை நாசப்படுத்தியதாக நினைத்து அவர் வேதனையில் அழ ஆரம்பித்துள்ளார். ஆனால் அங்கே தான் ட்விஸ்ட் அரங்கேறியுள்ளது. மாமியார் தனது வெள்ளை ஆடை சேதமடைந்ததை அடுத்து மாற்றுவதற்காக சென்ற நேரத்தில், சோலியை அணுகிய மணப்பெண் அவருக்கு நன்றி தெரிவித்தது மட்டுமல்லாமல் சோலிக்கு £ 55 யூரோ டாலர்களை டிப்ஸாக வழங்கியுள்ளார்.
அதாவது இந்தியா மதிப்பில் ரூ.5,500 வழங்கியுள்ளார். திருமணத்தில் கடைபிடிக்கும் சில விதிகளின்படி, மணமகளை தவிர்த்து நிகழ்ச்சிக்கு வரும் வேறுயாரும் வெள்ளை ஆடைகள் அணியக்கூடாது என்ற எண்ணத்தின் வெளிப்பாடாகத்தான் இது பார்க்கப்படுகிறது. காரணம், ``எனது மாமியார் வேறொருவரின் திருமணத்தில் இனி வெள்ளை நிற ஆடையை அணிந்திருக்கக்கூடாது" என்று அந்த மணமகள் தெரிவித்துள்ளார்.