ஆஸ்திரேலியாவின் மேற்கே தூரமான பகுதியில் வசித்த உலகின் மிக வயதான சிலந்தி, குளவியால் தாக்கப்பட்டு இறந்தது.
ஜியோஸ் வில்லோசஸ் என்ற இந்த டிரப்டோர் வகை சிலந்தி 1974-ம் ஆண்டு பிறந்தது. ஆராய்ச்சியாளர்களால் இது நம்பர் 16 என்று அழைக்கப்பட்டது. டிரப்டோர் வகை சிலந்திகள் மறைந்திருந்து திடீரென இரையை தாக்கக்கூடியவை.
மெக்ஸிகோவை சார்ந்த டாரன்டுலா என்ற சிலந்தியே, அதிக நாட்கள் வாழ்ந்ததாக கின்னஸ் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. நம்பர் 16, அதை விட பதினைந்து ஆண்டுகள் கூடுதலாக வாழ்ந்துள்ளது.
பெண் சிலந்தியாகிய நம்பர் 16, அக்டோபர் மாதம் இறந்ததாக, ஏப்ரல் மாத பசிபிக் கன்சர்வேசன் பயாலஜி என்ற அறிவியல் இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நம்பர் 16, வாழ்நாளின் பெரும்பகுதியை ஒரே வளையிலேயே கழித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் கர்ட்டின் பல்கலைக்கழகத்தை சேர்ந்த முனைவர் பட்ட ஆய்வு மாணவியும், சிலந்திகள் ஆய்வுக்கு தலைமை தாங்குபவருமான லியாண்டா மாசன், "ஜியோஸ் வில்லோசஸ் ஐம்பது வயது வரை வாழும் என்று எதிர்பார்த்தோம். அதன் இறப்பு எங்களுக்கு வேதனையளிக்கிறது.
எங்களுக்குத் தெரிந்த அளவில் இதுவே அதிக நாட்கள் வாழ்ந்த சிலந்தியாகும். டிரப்டோர் வகை சிலந்திகளின் குணங்கள், அவற்றின் பெருக்கம் பற்றி தொடர்ந்து ஆராய்ச்சி செய்ய, நம்பர் 16-ன் வாழ்க்கை பேருதவியாக அமையும்," என்று கூறியுள்ளார்.