பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கில் தொடர்புடைய உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை 15 நாள் சிறையில் அடைக்க திருவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி உதவிப் பேராசிரியர் நிர்மலா தேவி மாணவிகளை தவறாகப் பயன்படுத்த செல்போனில் பேசினார். இந்த வழக்கில் நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் உள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர். கருப்பசாமியிடம் நான்கு நாட்களும், முருகனிடம் ஐந்து நாட்களும் விசாரணை நடத்த நீதிமன்றம் சிபிசிஐடி காவல் துறைக்கு அனுமதியளித்திருந்தது.
இந்த நிலையில் திங்களன்று காலை சாத்தூர் நடுவர் நீதிமன்றத்திற்கு முருகனும் கருப்பசாமியும் அழைத்துச் செல்லப்பட இருந்தனர். நீதிபதி கீதா விடுப்பில் சென்றதால், திருவில்லிபுத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2-இல் இருவரையும் சிபிசிஐடி காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்.
இருவரையும் 15 நாள் (மே.14 வரை) நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி பரமசிவம் உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் விருதுநகர் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் மதுரை சிறைக்கு மாற்றப்பட்டனர்.