கடந்த ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி, அமெரிக்காவில் லாஸ் வேகாஸில் இன்னிசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அந்த இடத்திலிருந்து தென்மேற்காக பல நூறு அடி தூரத்தில் இருக்கும் மண்டேலா பே என்ற ஹோட்டலிலிருந்து மர்ம மனிதன் துப்பாக்கிச் சூடு நடத்தினான்.
கூடியிருந்த இருபத்திரண்டாயிரம் பேரில் 58 பேர் கொல்லப்பட்டனர்; ஐநூறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஸ்டீபன் பேடாக் என்ற 64 வயது மனிதர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தினார் என்று காவல்துறையினர் கூறுகின்றனர். மண்டேலா விடுதியின் 32வது மாடியில் அவரது சடலத்தை போலீஸார் கண்டுபிடித்தனர்.
துப்பாக்கி சூடு நடந்த உடனே மண்டேலா ஹோட்டலுக்குச் சென்ற காவல் அதிகாரிகளிடமிருந்த கேமராவின் பதிவுகளை தற்போது லாஸ் வேகாஸ் காவல்துறை வெளியிட்டுள்ளது. ஒரு வீடியோ பதிவில், ஹோட்டலின் அலாரம் ஒலிப்பதையும் போலீஸ் வாசலில் காத்திருப்பதையும் காண முடிகிறது.
அந்த வளாகத்தை காவல்துறையினர் சோதனை செய்வதும், போலீஸ் அதிகாரிகள் சங்கேத சொற்களால் பேசிக்கொள்வதும் அதில் பதிவாகியுள்ளது. அவசர போலீஸ் அழைப்புக்கான ஒலி பதிவுகளையும் வெளியிட இருப்பதாக காவல்துறை அறிவித்துள்ளது.