ஜெர்மனியில் இனி டீசல் கார்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு தடை உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்தாண்டு பிப்ரவரி மாதம், ஜெர்மனியின் நீதிமன்றம் ஒன்று, சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் டீசல் கார்களுக்கு உடனடியாக தடை விதியுங்கள் என்று முக்கிய நகரங்களுக்கு உத்தரவு பிறப்பித்தது.
இந்தத் தீர்ப்பின் மூலம், வோல்க்ஸ்வாகன் மற்றும் அதன் துணை நிறுவனங்களுக்கும் கம்பஷன் இன்ஜினுக்கு மாற்றைத் தேடுவதில் அழுத்தம் கொடுக்க முடியுமென்று கருதப்படுகிறது. மேலும், வாகனத்தின் புகை வெளியேற்றும் அமைப்பிலும் இந்த தீர்ப்பினால் மாற்றம் கொண்டுவரப்படும் என்று தெரிகிறது.
ஐரோப்பிய ஒன்றிய விதிகளின்படி, ஜெர்மனியில் காற்று மாசைக் குறைக்கவே இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது நீதிமன்றம். இது மட்டுமல்லாமல், காற்று மாசு அதிகமாக உள்ள நகரங்களில் பொதுப் போக்குவரத்தை இலவசமாக்கவும் ஜெர்மனி அரசு ஆலோசித்து வருகிறது.
நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்தினால், பெரும்பான்மையான டீசல் கார்களுக்கு சிக்கல் ஏற்படும். யூரோ-6 ஸ்டாண்டர்டுடன் வந்த கார்கள் மட்டுமே இந்தத் தடை உத்தரவில் இருந்து தப்பிக்கும். ஜெர்மனியில் மொத்தம் 1.5 கோடி டீசல் கார்கள் இருக்கின்றன. இதில் 27 லட்சம் கார்களில் மட்டுமே யூரோ-6 தொழில்நுட்பம் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த தொழில்நுட்பம் 2014 ஆம் ஆண்டு தான் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.