அமெரிக்க அணியில் விளையாடி தங்கம் வென்ற மதுரை பொண்ணு..

Advertisement

கனடாவில் நடைபெற்ற உலக இளையோர் டேபிள் டென்னிஸ் போட்டியில் விளையாடிய அமெரிக்க வாழ் தமிழரான லாவண்யா மருதபாண்டியன் தங்கம் வென்று அசத்தி உள்ளார்.

கண்டம்விட்டு கண்டம் தாண்டியும் மதுரையின் மண் மணம் மாறாத தமிழர் மருதபாண்டியனின் மகள் லாவண்யா தமிழகம் மட்டுமின்றி இந்தியாவுக்கே பெயர் வாங்கி கொடுத்திருக்கிறார்.

ஆம், மதுரையைச் சேர்ந்தவர் மருதபாண்டியன். இவரது மனைவி மல்லிகா. இவர்களுக்கு லாவண்யா மற்றும் கோபிகா என்ற மகள்கள் உள்ளனர். கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு மருதபாண்டியன் தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவில் குடியேறினார். தற்போது, அமெரிக்காவின் கலிபோர்னியா நகரத்தில் வசித்து வருகிறார்.

விளையாட்டு துறையில் மிகுந்த ஆர்வம் கொண்ட தன் மகள் லாவண்யாவின் விருப்பத்தை நிறைவேற்ற மருதபாண்டியன் கடும் முயற்சி எடுத்துக் கொண்டார்.

லாவண்யா தனது 5 வயது முதல் டேபிள் டென்னிஸில் பயிற்சி எடுத்து வருகிறார். விடா முயற்சியில் தற்போது உலகளவிலான இளையோர் டேபிள் டென்னிஸ் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

கனடாவில் உலகளவில் இளையோர் மகளிர் டேபிள் டென்னிஸ் 2018-ம் ஆண்டுக்கான போட்டி சமீபத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அமெரிக்க அணி சார்பில், லாவண்யா மருதபாண்டியன் பங்கேற்றார்.

விடா முயற்சியுடன் விளையாடிய அவர், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அணிகளுடன் மோதி கடுமையான போட்டிக்கு இடையில், தங்கம் வென்றுள்ளார்.

சீன வீராங்கணை லியு ஷிவன் தான் தனது ரோல் மாடல் என்று சொல்லும் லாவண்யா, இது குறித்து கூறுகையில், “பல்வேறு கடுமையான போட்டியாளர்களுடன் விளையாடி வெற்றிப்பெற்றது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அடுத்ததாக, டோக்யாவில் நடைபெறவுள்ள டோக்யா 2020 போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றிப்பெற வேண்டும் என்பதே எனது அடுத்த இலக்கு ” என்றார் உற்சாகத்துடன்.

தனது மகள் லாவண்யாவின் வெற்றி குறித்து மருதபாண்டியன் கூறுகையில், “லாவண்யா 5 வயது முதலே டென்னிஸ், டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் பயிற்சி எடுத்துக் கொண்டார். அத்துடன் பல்வேறு கலைகளிலும் பயிற்சி மேற்கொண்டார்.

ஒரு கட்டத்தில் லாவண்யா டென்னிஸ் மற்றும் டேபிள் டென்னிஸ் விளையாட்டுகளில் தேர்ச்சியடைந்து வந்தார். பிறகு, முழு கவனத்தையும் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் ஈடுபடுத்திக் கொண்டார்.

தற்போது லாவண்யாவிற்கு 15 வயது ஆகிறது. இந்த 10 ஆண்டுகளில் நிறைய வெற்றி, தோல்வியை சந்தித்துள்ளார். தோல்வி அடைந்தாலும் மனம் தளராமல் அடுத்த போட்டிக்கு நம்பிக்கையுடன் தயாராகுவார்.

ஒரு பக்கம் படிப்பு மறுபக்கம் விளையாட்டு என இரண்டிலும் தேர்ச்சி பெற்றார். கடுமையான தடைகளை கடந்துதான் தங்கம் வென்றுள்ளார். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. லாவண்யா அமெரிக்காவில் பிறந்ததால் அவர் அமெரிக்க குடியுரிமையுடன் அமெரிக்காவிற்கு விளையாடி வருகிறார்.

இந்த வெற்றியின் மூலம், கடின உழைப்பு வீண் போகாது என்பதை லாவண்யா நன்கு புரிந்துக் கொண்டார் என்று மனநிறைவு கொள்ளும் மருதபாண்டியன், ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் தனித்திறமைகள் இருக்கும் அதை கண்டறிந்து பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும் என்றார் நெகிழ்ச்சியாக.

 - thesubeditor.com

Advertisement
/body>