மலேசியாவில் பார்னியோ தீவின் கோட்டா கினபாலு நகரத்தில் உள்ள மசூதி புகழ்பெற்ற சுற்றுலாதலமாகும். இப்பகுதிக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமாக வந்து செல்வது வழக்கம்.
புனித தலமாக கருதப்படும் இந்த மசூதியின் குவிமாடம் அழகானது. அந்த மசூதியின் சுற்றுச்சுவரின்மேல் இரு வெளிநாட்டுப் பெண் பயணிகள், ஏறி நின்று அரைகுறை ஆடைகளுடன் அருவருப்பான முறையில் நடனம் ஆடியுள்ளனர்.
அவர்கள் யாரென்று தெரியாவிட்டாலும் பார்ப்பதற்கு கிழக்கு ஆசிய நாட்டவர்போல் உள்ளனர் என கூறப்படுகிறது. உடலின் பாகங்கள் தெரியும்படி ஆடைகளை அணிந்து அவர்கள் இருவரும் போட்ட குத்தாட்டம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
புனித தலத்தை அவமதிக்கும் வகையில் சுற்றுலா பயணிகள் நடனமாடியது, அங்குள்ள மக்களிடைய பெருங்கோபத்தை எழுப்பியுள்ளது. மசூதியின் தலைவர் ஜமால் சகாரன், "வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் இந்தச் செயல் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது," என்று தெரிவித்துள்ளதுடன், தற்காலிகமாக சுற்றுலா பயணிகள் கினபாலு மசூதிக்கு வருவதற்கு தடையும் விதித்துள்ளார்.