தாய்லாந்து நாட்டில் 9 நாட்கள் குகைக்குள் சிக்கித் தவித்த கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர்கள் சில நாட்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்கள் இன்னும் குகைக்குள் இருந்து பத்திரமாக மீட்டுக் கொண்டு வரும் பணி தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், சிறுவர்களை குகைக்குள் அழைத்துச் சென்ற அணியின் பயிற்சியாளர், சிறுவர்களின் பெற்றோருக்கு உருக்கமான ஒரு கடித்ததை எழுதியுள்ளார். கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி சிறுவர்கள் நிறைந்த ஒரு கால்பந்து அணி, தங்களது பயிற்சியாளருடன் தாய்லாந்தில் இருக்கும் சியாங் ராய் பகுதியில் உள்ள தம் லுவாங் குகைக்குச் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக குகைக்குள் அவர்கள் அனைவரும் மாட்டிக் கொண்டுள்ளனர்.
சிறுவர்கள் அனைவரும் பதின் பருவத்தினர். இந்த விவகாரம் தாய்லாந்தில் மட்டுமல்ல உலக அளவில் கவனம் பெற்றது. சம்பவம் குறித்து வெளியே தெரிய ஆரம்பித்த உடன், உலகின் பல்வேறு மூலைகளிலிருந்து குகையில் சிக்கி இருப்பவர்களை மீட்பதற்காகவே பயிற்சி பெரும் நபர்கள் சிறுவர்களைத் தேட ஆரம்பித்துள்ளனர். பல நாட்டு அரசுகளும் சிறுவர்களை மீட்க நிபுணர்களை அனுப்பி வைத்தது.
இந்நிலையில் 9 நாட்கள் குகையில் இருந்த 12 சிறுவர்கள் மற்றும் 25 வயதாகும் அவர்களின் கோச் ஆகியோர் கண்டுபிடிக்கப்பட்டனர். இன்னும் அவர்கள் குகையிலிருந்து வெளியே வரவில்லை. அவர்களை பத்திரமாக மீட்டுக் கொண்டு வரும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் சிறுவர்களின் பெற்றோரர்களுக்கு ஒரு உருக்கமான கடிதத்தை எழுதியுள்ளார் பயிற்சியாளர் எக்காபோல் சந்தாவோங்.
‘உங்கள் குழந்தைகள் அனவரும் நன்றாக உள்ளனர். உங்கள் குழந்தைகளை நான் நன்றாக கவனித்துக் கொள்கிறேன். அவர்களின் பெற்றோர்களாகிய உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இந்த சம்பவம் தொடர்பாக எங்களுக்கு பக்கபலமாக இருந்த அனைவருக்கும் நன்றி. எனது பாட்டி மற்றும் அத்தைக்கு, நான் நன்றாக இருக்கிறேன். கவலைப் படாதீர்கள். உங்களை கவனித்துக் கொள்ளுங்கள் என சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்’ என்று சந்தாவோங் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.