மேற்கு வங்கத்தில் பள்ளிப்படிப்பை முடித்த மாணவியை பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் பள்ளிப்படிப்பை முடித்த ஐஸ்வர்யா என்ற மாணவி, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கோரி விண்ணப்பித்தார். மேலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஒதுக்கீட்டு இடங்களுக்கு நடத்தப்படும் கலந்தாய்வில் தன்னை அனுமதிக்கும்படி உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், "மாணவி ஐஸ்வர்யா தமிழகத்தை சேர்ந்தவர் என்பதற்கான எந்த ஆதாரங்களையும் தாக்கல் செய்யவில்லை" என வாதிட்டார்.
இதையடுத்து, அரசு வேலை, தொழில் காரணமாக வெளி மாநிலம் செல்பவர்கள், தங்கள் நிரந்தர முகவரியை இழந்து விடக்கூடாது எனத் தெரிவித்த நீதிபதி, மருத்துவ படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வில் மனுதாரரை அனுமதிக்க உத்தரவிட்டார்.
அதேசமயம், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டின் கீழ் தன் விண்ணப்பத்தை பரிசீலிக்க வேண்டும் என கோரினால், அதை நிராகரிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி வைத்தியநாதன், மனுவுக்கு வரும் 30ம் தேதிக்குள் பதிலளிக்க மருத்துவ மாணவர் சேர்க்கை தேர்வுக்குழுவுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.