ஒரே நேரத்தில் மாநில, மத்திய தேர்தல்கள் கூடாது என கருத்துக்கேட்பு கூட்டத்தில் அதிமுக சார்பாக தம்பிதுரை எம்.பி. பேசியுள்ளார்.
நாட்டில், மத்தியிலும் மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் தேர்தல் நடக்க வேண்டும் என ஆளும் பாஜக தலைமையிலான மத்திய அரசு விரும்புகிறது. இதனைச் சாத்தியப்படுத்தவும் பெரும் முயற்சி எடுத்து வருகிறது. இந்நிலையில் இந்தப் புதிய முறை தேர்தல் குறித்து பல முக்கிய தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளுக்கு இடையே பலதரப்பட்ட மாறுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன.
இதையடுத்து நாட்டில் ஒட்டுமொத்தமாக மத்தியிலும் மாநிலங்களிலும் தேர்தல் நடத்துவது குறித்து நாட்டில் உள்ள அனைத்து முக்கியக் கட்சிகளிடமும் க்ருத்துக் கேட்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து பல கட்சிகளும் இணையும் கருத்துக் கேட்புக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.
இதற்காக தமிழகத்தில் இருந்து அதிமுக சார்பாக தம்பிதுரை எம்.பி மற்றும் மாநில சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் நிறைவுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தம்பிதுரை எம்.பி, "நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தக்கூடாது என்பதே அதிமுகவின் நிலைப்பாடு.
மக்களவை தேர்தலுடன் தமிழக பேரவைக்கு தேர்தல் நடத்தக்கூடாது என தெரிவித்துள்ளோம் நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் தொடர்பாக பொதுமக்களின் கருத்தையும் அறிய வேண்டும்" எனக் கூறியுள்ளார்.