“தீவிரவாதிக்கு நாங்கள் டிப்ஸ் தருவதில்லை” என்று குறிப்பிட்ட வாடிக்கையாளரை இனி தங்கள் உணவகத்தில் அனுமதிப்பதில்லை என்று அமெரிக்காவிலுள்ள சால்ட்கிராஸ் ஸ்டீக் உணவகத்தின் தலைமை செயல் அதிகாரி டெர்ரி டர்னி கூறியுள்ளார்.
அமெரிக்கா டெக்சாஸில் ஒடசாவில் சால்ட்கிராஸ் உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. கடந்த சனிக்கிழமை (ஜூலை 14) இரவு சிலருக்கு, பணியாளர் கலீல் கெவில் உணவு பரிமாறியுள்ளார். அவர்கள் தாங்கள் சாப்பிட்டதற்கான கட்டண சீட்டில் (Receipt) பணியாளருக்கான அன்பளிப்பு என்ற இடத்தில் (tips) '0' என்று குறிப்பிட்டதுடன், பணியாளரின் பெயரான 'கலீல்' என்பதை வட்டமிட்டு, 'நாங்கள் தீவிரவாதிக்கு அன்பளிப்பு தருவதில்லை' (We don't tip terrorist) என்று எழுதியுள்ளார்கள்.
வாடிக்கையாளர்களின் செயலை பார்த்து கலீல் கெவில் என்ன செய்வதென்று தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்துபோய்விட்டார். அடுத்தநாள், தமது முகநூல் பக்கத்தில் அதை பகிர்ந்து கொண்டு, "நேற்று இரவு என்னுடைய மேசைகளில் ஒன்றிலிருந்து இந்தக் குறிப்பு கிடைத்தது. அந்தக் கணத்தில் எதை சிந்திப்பது, என்ன சொல்வது என்று ஒன்றுமே புரியவில்லை.
அன்பளிப்புக்காக நான் இதை எழுதவில்லை. இனவெறி, வெறுப்பு இன்னும் இருக்கிறது என்று மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதை பகிர்ந்து கொள்கிறேன். இது புதிதான விஷயம் இல்லையென்றாலும், இறைவன் மீதுள்ள உங்கள் நம்பிக்கையை சோதிப்பதாக உள்ளது...” என்று குறிப்பு எழுதியுள்ளார்.
கறுப்பு - வெள்ளை இனத்தவரான கலீல் கெவில் உண்மையில் கிறிஸ்தவ சமயத்தை சார்ந்தவர். அவரது தந்தை இராணுவத்தில் பணியாற்றியவர். தந்தையின் நெருக்கமான நண்பரின் பெயர் 'கலீல்'. அந்த கலீல் விபத்தொன்றில் மரணமடைந்து விட்டார்.
தன் நண்பனின் நினைவாகவே, தன் மகனுக்கு 'கலீல்' என்று பெயரிட்டுள்ளார். 'கலீல்' என்ற அரபு வார்த்தைக்கு 'நண்பன்' என்பது அர்த்தமாகும். இத்தகவலை கலீல் கெவிலின் தாயாரான ஜமி ஸ்வின்டில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளிக்கையில் கூறியுள்ளார்.
20 வயதான கலீல் கெவிலின் இந்த முகநூல் பதிவு 19,000 முறை மற்றவர்களால் பகிரப்பட்டுள்ளது. 8,000 பேர் பின்னூட்டமிட்டுள்ளனர். பலர் அவருக்கு கிடைக்கத்தவறிய அன்பளிப்புத் தொகையை (tips) அனுப்பி வைத்துள்ளனர்..
சால்ட்கிராஸ் உணவகத்தின் தலைமை செயல் அதிகாரி டெர்ரி டர்னி, "எங்கள் பணியாளர் பக்கமே நாங்கள் நிற்கிறோம். இன துவேஷத்தை எந்த வடிவத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த வாடிக்கையாளரை எங்கள் உணவகத்தில் அனுமதிக்க மாட்டோம்” என்று கூறியுள்ளார்.
வாடிக்கையாளரின் கடன் அட்டை விவரங்களை மற்றவர்கள் பார்க்காத வகையில் கலீல் கெவில் மறைத்து விட்டார்.