டிசிஎஸ் நிறுவனம் இன உணர்வுடன் இந்தியர்களுக்கு ஆதரவாகவும், அமெரிக்கர்களுக்கு எதிராகவும் செயல்படுவதாக கூறிய புகாரை அந்நாட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ், உலகெங்கும் கிளைகள் கொண்டுள்ளது. அமெரிக்காவின் பல பகுதிகளிலும் டிசிஎஸ் நிறுவனம் செயல்படுகிறது.
டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றிய அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் ஊழியர்கள் சிலர் இந்த வழக்கை தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில் ‘‘அமெரிக்காவில் டிசிஎஸ் அலுவலகங்களில் இன ரீதியான பாகுபாடு பார்க்கப்படுகிறது. அமெரிக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகின்றனர்.
சம்பள உயர்வு, போனஸ் போன்ற சலுகைகள் இந்தியர்களுக்கும், பணிக்குறைப்பு, பணிநீக்கம் போன்ற நிறுவன ரீதியான நடவடிக்கைக்கு அதிகமாக அமெரிக்கர்களே ஆளாகின்றனர். அமெரிக்காவில் இயங்கி வரும் டிசிஎஸ், அமெரிக்கர்களுக்கு எதிராக செயல்படுகிறது. அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த கலிபோர்னியா நீதிமன்றம், ‘‘டிசிஎஸ் நிறுவனம் இன ரீதியாகவும், அமெரிக்கர்களிடம் பாகுபாட்டுடனும் நடந்து கொள்வதாக கூறப்படுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இதற்கான ஆதாரங்கள் எதுவும் சமர்பிக்கப்படவில்லை.
அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் ஊழியர்களின் கோபத்தை மட்டும் கணக்கில் கொண்டு இந்த வழக்கை அணுக முடியாது" எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.