டெல்டா மாவட்டங்களுக்கு தன்னுடைய பாக்கெட்டில் இருந்து பெரிதாக எந்த நிதியையும் தினகரன் வழங்கவில்லை. 'நேற்றுதான் வேதாரண்யத்தில் ஒரு குடும்பத்துக்குப் பத்தாயிரம் ரூபாயைக் கொடுத்தார்' என்கின்றனர் அமமுக தொண்டர்கள்.
தஞ்சாவூர் உள்பட டெல்டா மாவட்டங்களைப் பெரிதும் பாதித்திருக்கிறது கஜா புயல். இந்தப் பகுதிளில் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. தமிழக அமைச்சர்களும் இந்தப் பகுதிகளில் முகாமிட்டு நிவாரணப் பணிகளைக் கவனித்து வருகின்றனர். இதுதவிர, நிவாரண நிதி திரட்டும் வேலைகளும் ஒருபுறம் நடந்து வருகின்றன. தமிழக அரசின் நிவாரண நிதிக்கு ஏராளமான தொகைகளை வாரி வழங்கி வருகின்றனர் தொழில் அதிபர்கள். திமுகவும் தன்னுடைய பங்குக்கு ஒரு கோடி ரூபாயைக் கொடுத்திருக்கிறது. புயல் பாதித்த பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு 48 கோடி ரூபாய் அளவுக்குக் கட்டண விலக்கு கொடுத்திருக்கிறார் ஐஜேகே தலைவர் பாரிவேந்தர். ஆனால், டெல்டா மண்ணில் பிறந்த தினகரன், இதுவரையில் பத்து பைசாவைக்கூட கண்ணில் காட்டவில்லை. இதனைக் கேலி செய்து சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர் சிலர்.
இதனால் ஆவேசப்பட்ட அமமுக பொறுப்பாளர்கள், அவர்களுக்குத் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இதைப் பற்றி பேசும் அவர்கள், ' கஜா புயல் பாதித்த தினத்தில் இருந்து இன்று வரையில் ஓய்வில்லாமல் சுற்றி வருகிறார் தினகரன். அவரைப் பற்றி அவதூறு பேசுவதற்கென்றே சிலர் இருக்கிறார்கள். நிவாரண உதவிகளை வழங்குவதற்காக டாரஸ் வண்டிகளும் லாரிகளும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த வாகனங்களில் ஏராளமான பொருள்கள் சென்று வருகின்றன. நேற்றுகூட, வேதாரண்யத்தில் உள்ள ஆறுகாட்டுத்துறையில் வீடி, வாசல்களை இழந்த ஒரு அம்மா, தினகரனிடம் கதறியழுது கொண்டிருந்தது. அந்த சம்பவத்தால் கண்ணீர்வடித்த தினகரன், உடனே பக்கத்தில் இருந்த கட்சிக்காரரிடம் பத்தாயிரம் ரூபாயை வாங்கி, அந்தம்மாவிடம் கொடுத்தார். அந்தளவுக்கு நலப்பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறார். அவரைப் பற்றிப் பேசுவதற்கு முன்னால், நிவாரணப் பணிகளையும் பார்த்துவிட்டுப் பேசட்டும்' என்றார் ஆத்திரத்துடன்.
- அருள் திலீபன்