அமெரிக்க தொழில்நுட்ப நட்சத்திரங்களுள் ஒருவரும், ஹெச்க்யூ டிரிவியா (HQ Trivia) என்னும் இணையதள கேள்வி பதில் நிகழ்ச்சி மற்றும் செயலியின் உடன்நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான காலின் கிரோல், கடந்த ஞாயிறு அதிகாலை நியூயார்க் மன்ஹாட்டனிலுள்ள தமது குடியிருப்பில் உயிரிழந்தார்.
அளவுக்கு அதிகமான போதை மருந்தை எடுத்துக்கொண்டதால் இறந்திருக்கலாம் என்று காவல்துறையினர் கருதுகின்றனர்.
ஹெச்க்யூ டிரிவியா என்னும் இணையதள செயலி மிகவும் புகழ்பெற்றது. ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களிலும் இந்த விளையாட்டு செயலி இயங்கி வருகிறது. 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஹெச்க்யூ டிரிவியா விளையாட்டில் கோடிக்கணக்கானோர் பங்கு பெற்று வருகின்றனர். சரியான விடை கூறுவோருக்கு பரிசுகள் கிடைப்பதால் இது குறுகிய காலத்தில் அதிக பிரபலமடைந்தது.
காலின் கிரோல் படுக்கையறையில் சுயநினைவற்று கிடந்தததாகவும் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாக கூறியதாகவும் நியூயார்க் காவல்துறை தெரிவித்துள்ளது. கிரோலின் அருகே கோகெய்ன் மற்றும் ஹெராயின் கண்டெடுக்கப்பட்டுள்ளதால், போதை மருந்தினால் அவர் உயிரிழந்திருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. ஆனாலும், மரணத்துக்கான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
தற்போது 34 வயதான கிரோல், முதலில் வைன் (Vine) என்னும் வீடியோ செயலியை உருவாக்கினார். 2012ம் ஆண்டு ட்விட்டர் நிறுவனம் அதை வாங்கியது. இந்தச் செயலி பின்னர் மூடப்பட்டுவிட்டது. முன்னதாக அவர் ஜெட்செட்டர் மற்றும் யாஹூ, ரைட் மீடியா ஆகிய நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார்.