தமிழகத்தின் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசு அறிவித்தது. இதன்பிறகு, இதுகுறித்து வாய் திறக்காமல் இருந்த மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் 20ம் தேதி மதுரை, தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளதாக கூறப்பட்டது. ஆனாலும், அதற்கான ஒப்புதல் அளிக்கப்படாமலே இருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் சுமார் 1,258 கோடி ரூபாய் செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இதனால், மருத்துவமனை கட்டிடப்பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் இன்னும் 45 மாதங்களில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க ஒப்புதல் அளித்த மத்திய அமைச்சரவைக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நன்றி தெரிவித்துள்ளார். குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கும் நன்றிகள் தெரிவித்து அவர் ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார்.