`வறுமையில் எம்.எல்.ஏ வீடு கட்டி கொடுத்த மக்கள் - மத்திய பிரதேசத்தில் நெகிழ்ச்சி!

bjp mla sitaram lives in hut people helped for constructing their new house

கோடிகளில் புரளும் எம்.எல்.ஏ.க்களுக்கு மத்தியில் ஏழ்மையான வாழ்வை வாழ்ந்து வரும் பாஜக எம்.எல்.ஏ ஒருவருக்கு மக்களே சேர்ந்து வீடு கட்டி கொடுத்து நெகிழ வைத்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தின் விஜய்ப்பூர் தொகுதி எம்.எல்.ஏ சீதாராம் ஆதிவாசி. பழங்குடியினத்தைச் சேர்ந்த இவர் தான் மிகவும் ஏழ்மையான நிலையில் இருக்கிறார். பாஜகவின் தீவிர ஆதரவாளரான இவர் ஏற்கனவே இரண்டு முறை சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டுள்ளார். ஆனால் அந்த இரண்டு முறையும் தேர்தலிலும் தோல்வி அடைந்தார். இருப்பினும் கட்சியின் தீவிர விசுவாசி என்பதாலும், தொகுதி பகுதி மக்களிடம் நல்லவர் என்ற பெயர் இருப்பதாலும் நடந்த முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அவருக்கு கட்சி தலைமை மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுத்தது. கட்சியின் நம்பிக்கைக்கு ஏற்றமாதிரி இந்த முறை வெற்றிகனியை பறித்தார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வசதிமிக்க வேட்பளாரான ராம்நிவாஸ் ராவத்தை அதிக அளவு வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து முதல் முறையாக எம்.எல்.ஏவானார். எம்.எல்.ஏ என்ற பதவி வந்தபிறகும் பந்தா காட்டாமல் வழக்கம் போல் தனது மண் குடிசை வீட்டிலேயே வாழ்ந்து வந்துள்ளார்.

முன்னதாக சீதாராம், தனது வேட்புமனு தாக்கலில், ``மொத்தம் ரூ.46 ஆயிரம் பணமும், அதில் ரூ.25 ஆயிரம் ரொக்கமாகவும், மீதம் வங்கியிலும், 600 சதுர அடியில் குடிசை வீடும், இரண்டு ஏக்கர் நிலமும்" உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் தொண்டர்கள், தொகுதி மக்கள் அவர் நிலையை புதிய வீடு கட்டும்படி வலியுறுத்தியுள்ளனர். அவர்களிடம் தன் நிலையை எடுத்துரைத்து வீடு கட்டுவதை மறுத்து வந்துள்ளார் சீதாராம். இதனால் கட்சி நிர்வாகிகள், அந்தப் பகுதி கிராம மக்கள், அவரது ஆதரவாளர்கள் சீதாராமுக்காக பணம் திரட்டி புதிய வீடு கட்ட உதவியுள்ளனர். முதல்முறையாக எம்.எல்.ஏவாக ஆகியுள்ள சீதாராமுக்கு இந்த மாதம் தான் முதல்மாத ஊதியம் வரவுள்ளது. தனது சம்பளத்தை தொகுதி மக்களுக்கு செலவு செய்வதாக ஏற்கனவே வாக்குறுதி அளித்துள்ளார். ஆனால் அதையும் வேண்டாம், அந்தப் பணத்தை வீடு கட்ட வைத்துக்கொள்ளுங்கள் எனக் கூறி நெகிழ வைத்துள்ளனர் மக்கள். இதனால் தற்போது புதிய வீடு கட்டும் பணிகளை தொடங்கியுள்ளார் எம்.எல்.ஏ சீதாராம்.

மக்களின் உதவி குறித்து பேசிய சீதாராம், ``வீடு கட்டும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை. முதல் மாத ஊதியமும் இன்னும் கிடைக்கவில்லை. மக்கள் தான் வீடு கட்ட உதவி புரிந்துள்ளனர். நான் தேர்தலில் வெற்றிபெற்ற போதே, என் எடைக்கு நிகராக காசுகளை அன்பளிப்பு கொடுத்து ஏற்கனவே உதவியிருந்தனர். அப்போது அந்தப் பணத்தின் மூலமாக தான் என் குடிசையை பராமரித்தேன்" என கூறி நெகிழ்ந்துள்ளார்.

 

 

You'r reading `வறுமையில் எம்.எல்.ஏ வீடு கட்டி கொடுத்த மக்கள் - மத்திய பிரதேசத்தில் நெகிழ்ச்சி! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பூமியிலிருந்து நிலவுக்குச் சென்ற பாறை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்