சிவசேனா தலைமையில் ஆட்சி.. காங்கிரஸ், என்.சி.பி. ஆதரவு?

Congress, NCP to support a ShivSena led government in Maharashtra

மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் ஆட்சியமைப்பது குறித்து காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன.

மகாராஷ்டிராவில் கடந்த மாதம் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால், பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த முறை போல் கூட்டணி ஆட்சி அமைவது உறுதியான நிலையில், திடீரென இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

தேர்தலுக்கு முன்பு இரு கட்சிகளும் சீட் பங்கீடு செய்த போது, இந்த கூட்டணி வெற்றி பெற்றால் சிவசேனா கட்சிக்கு இரண்டரை ஆண்டு காலம் முதல்வர் பதவி தரப்பட வேண்டுமென்றும், அமைச்சரவையில் சரிபாதி தர வேண்டுமென்றும் பேசப்பட்டிருக்கிறது. அதன்படி, முதல்வர் பதவியை சிவசேனா பிடிவாதமாக கேட்டு வருகிறது. பாஜகவோ அப்படி எந்த ஒப்பந்தமும் போடவில்லை என்று கூறி, முதல்வர் பதவியை விட்டுத் தர முடியாது என்று மறுத்தது.

இதனால், தேர்தல் முடிவுகள் வெளியாகி 15 நாட்களாகியும் இது வரை மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கப்படவில்லை. கடந்த சட்டசபையின் பதவிக்காலம் முடிவடைந்ததால், முதல்வர் பதவியில் இருந்து பட்நாவிஸ் ராஜினாமா செய்து விட்டார். மேலும், போடாத ஒப்பந்தத்தை போட்டதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பொய் சொல்வதாக குற்றம்சாட்டினார். இதையடுத்து, சிவசேனா, பாஜக இடையே மோதல் பெரிதாகி விட்டது.

இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வீட்டில் காங்கிரஸ் தலைவர்கள் பாலாசாகேப் தோரட், அசோக் சவான், சுஷில்குமார் ஷிண்டே, பிருத்வி சவான் மற்றும் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் ஆலோசனை நடத்தியுள்ளனர். இதில் சிவசேனா தலைமையில் ஆட்சியமைப்பது பற்றி பேசியுள்ளனர்.

ஆரம்பத்தில் சிவசேனா அரசை ஆதரிப்பது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் சரத்பவார் ஆலோசித்தார். அப்போது சோனியா அவரிடம், சிவசேனாவை நம்ப முடியாது, எப்போது வேண்டுமானாலும், பாஜக பக்கம் ஓடிவிடும் என்று கூறியிருக்கிறார்.
இதன்பின்பு, மத்திய பாஜக அரசில் இருந்து சிவசேனா விலகினால் அந்த கட்சி மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க ஆதரவு தருவதாக கூறப்பட்டிருக்கிறது. அதன்படி தற்போது சிவசேனாவுடன் பவாரும், காங்கிரஸ் தலைவர்களும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் தரப்பில் சபாநாயகர் பதவியை மட்டும் கேட்பதாக கூறப்படுகிறது.

சிவசேனா தலைமையில் ஆட்சி அமையுமா அல்லது பாஜக வேறு யுக்தியை கையாளுமா என்பது ஓரிரு நாளில் தெரிந்து விடும்.

You'r reading சிவசேனா தலைமையில் ஆட்சி.. காங்கிரஸ், என்.சி.பி. ஆதரவு? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அயோத்தி வழக்கு தீர்ப்பு.. யாருடைய வெற்றியுமல்ல.. பிரதமர் மோடி கருத்து

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்