கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் பலியான பரிதாபம் 4 பெண்கள் உள்பட 9 பேர் சீரியஸ்

5 tribespeople die after having illicit liquor

பாலக்காடு அருகே கள்ளச்சாராயம் குடித்த ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பெண்கள் உட்பட 9 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலியான மற்றும் மருத்துவமனையில் உள்ள அனைவருமே உறவினர்கள் ஆவர்.பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோடு அருகே செல்லங்காவு என்ற ஆதிவாசி காலணி உள்ளது. இந்த காலணியைச் சேர்ந்த சிவன் (37) என்பவர் கடந்த இரு தினங்களுக்கு முன் மது வாங்கி வந்தார்.

பின்னர் அப்பகுதியைச் சேர்ந்த ராமன் (61), இவரது தம்பி மூர்த்தி (28), ஐயப்பன் (58), இவரது மகன் அருண் (25) உட்பட அந்த காலணியைச் சேர்ந்த சிலருடன் சேர்ந்து சிவன் மது அருந்தினார். இவர்களுடன் காலணியிலுள்ள 4 பெண்களும் மது அருந்தினர். பின்னர் அனைவரும் தங்களது வீடுகளுக்குச் சென்று விட்டனர்.

மறுநாள் காலை ராமன் தனது வீட்டில் வைத்து திடீரென மயங்கி விழுந்து இறந்தார். அது சாதாரண மரணம் என்று நினைத்து போலீசிடம் தகவல் தெரிவிக்காமல் ராமனின் உடலை அடக்கம் செய்துவிட்டனர். இந்நிலையில் மாலையில் ஐயப்பன் என்பவர் மயங்கி விழுந்து இறந்தார். இதன் பிறகு தான் மது குடித்ததால் தான் மரணம் ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் அப்பகுதியினருக்கு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அந்தக் காலணியைச் சேர்ந்தவர்கள் போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று மது அருந்திய அனைவரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதில் சிகிச்சை பலனளிக்காமல் சிவன், மூர்த்தி மற்றும் அருண் ஆகிய 3 பேரும் பரிதாபமாக இறந்தனர். 4 பெண்கள் உள்பட 9 பேர் பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சாராயத்தில் கூடுதல் போதைக்காக சானிடைசர் கலந்திருக்கலாம் என்று போலீசுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை முடிவு வந்த பின்னரே சாவுக்கான காரணம் என்ன என்பது தெரியவரும் என்று பாலக்காடு மாவட்ட எஸ்பி சிவா விக்ரம் கூறினார்.

You'r reading கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் பலியான பரிதாபம் 4 பெண்கள் உள்பட 9 பேர் சீரியஸ் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பஞ்சாப் சட்டசபைக்குள் ஆம்ஆத்மி எம்.எல்ஏ.க்கள் விடிய விடிய போராட்டம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்