மத்திய விசாரணை அமைப்புகள் அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த முயற்சிக்கிறது பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் பரபரப்பு கடிதம்

சிபிஐ, என்ஐஏ உள்பட மத்திய விசாரணை அமைப்புகள் கேரள அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது என்று பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். திருவனந்தபுரத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்தப்பட்ட வழக்கு கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கேரள எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து மத்திய விசாரணை அமைப்பு விசாரணை நடத்தக் கோரி பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதினார். இதை தொடர்ந்து தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ விசாரணையை தொடங்கியது. இதில் பல்வேறு முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து சுங்க இலாகாவும், தொடர்ந்து மத்திய அமலாக்கத் துறையும் விசாரணையை தொடங்கியது.

இந்த விசாரணையில் கேரள அரசின் பல்வேறு திட்டங்களிலும் தங்கக் கடத்தல் கும்பல் முறைகேடு செய்தது தெரியவந்தது. இதையடுத்து கேரள அரசின் ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டமான லைஃப் மிஷன் மற்றும் குறைந்த கட்டணத்தில் அனைவருக்கும் இன்டர்நெட் வசதியை கொடுக்கும் கே போன் உள்பட திட்டங்கள் குறித்தும் மத்திய விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்தின. இது கேரள அரசுக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தியது. இதையடுத்து மத்திய விசாரணை அமைப்புகள் ஒழுங்காக விசாரணை நடத்தவில்லை என்று முதல்வர் பினராயி விஜயன் கூறினார். இந்நிலையில் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு இன்று ஒரு கடிதம் அனுப்பி அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பது: நான் கேட்டுக் கொண்டதின் படி தான் தங்கக் கடத்தல் வழக்கை விசாரிக்க மத்திய விசாரணை அமைப்பை மத்திய அரசு கேரளாவுக்கு அனுப்பி வைத்தது.

ஆனால் தற்போது விசாரணை தவறான கோணத்தில் நடைபெற்று வருகிறது. கேரள அரசு மீது குற்றம் கண்டு பிடிக்கும் நோக்கத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கூட்டாட்சித் தத்துவத்தில் மத்திய விசாரணை அமைப்புகளுக்கு அரசியல் சாசன சட்டத்தின் படி அதிகாரங்களும், எல்லைகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஆனால் அதை மீறி மத்திய விசாரணை அமைப்புகள் செயல்படுகின்றன. எதை விசாரிக்க வேண்டுமோ அதை விசாரிக்காமல் தேவையில்லாத விஷயங்களில் தலையிடுகின்றனர். நீதியையும், நேர்மையையும் மறந்துவிட்டு விசாரணை நடத்துகின்றனர். இப்படியே போனால் மத்திய விசாரணை அமைப்புகள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விடும். எனவே இதுகுறித்து பிரதமர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

You'r reading மத்திய விசாரணை அமைப்புகள் அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த முயற்சிக்கிறது பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் பரபரப்பு கடிதம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - குவாட் காமிரா, ஸ்டீரியோ ஸ்பீக்கருடன் ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன்: டிசம்பர் 22 முதல் விற்பனை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்