இ-மெயில், எஸ்எம்எஸ் மூலம் விவாகரத்து வழங்கலாமா? - புதிய சட்டம்

ஒரே நேரத்தில் முத்தலாக் என்று கூறி மனைவியை விவாகரத்து செய்யும் கணவருக்கு, மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கும் புதிய சட்ட முன்வடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஒரே நேரத்தில் முத்தலாக் என்று கூறி மனைவியை விவாகரத்து செய்யும் கணவருக்கு, மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கும் புதிய சட்ட முன்வடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த புதிய சட்ட முன்வடிவில் கணவர் வாய்மொழியாகவோ, கடிதம், இ-மெயில் மற்றும் கைப்பேசியின் குறுந்தகவல் உள்ளிட்டவை மூலமாகவோ முத்தலாக் சொல்லி மனைவியை விவாகரத்து செய்வதையும் தடை செய்யும் வகையில் அமைந்துள்ளது.

இஸ்லாமிய ஷரியத் சட்டங்களை மேற்கோள்காட்டி, இஸ்லாமிய ஆண்கள், வாய்மொழியாக மூன்று முறை ‘தலாக்’ என்று தெரிவிப்பதன் மூலம் மனைவியை விவாகரத்து செய்யும் நடைமுறை உள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 35 வயது ஷாய்ரா பானு, தனது தாய் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, அவரது கணவர் ரிஸ்வான் அகமது 2015-ஆம் ஆண்டு அக்டோபர் 15-ஆம் தேதி திடீரென ஒரு கடிதத்தில் மூன்று முறை ‘தலாக்’ எனக் குறிப்பிட்டு அவரை விவாகரத்து செய்தார்.

இதில் ஷாய்ரா பானு கடுமையான பாதிப்புக்கு உள்ளானார். அதைத் தொடர்ந்துதான், முத்தலாக் விவாகரத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கலாகின. ‘முத்தலாக்’ என்ற முறையைத் தவறாக பயன்படுத்தி ஸ்கைஃப், வாட்ஸ் அப் மூலம் கூட இஸ்லாமிய ஆண்கள் தலாக் கூறி விவா கரத்து அளிப்பதாக இஸ்லாமியப் பெண்கள் தங்களின் மனுக்களில் குறிப்பிட்டிருந்தனர்.

கடந்த மார்ச் மாதம், உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து, இந்த விவகாரம் தொடர்பாக தொடுக்கப்பட்ட 7 மனுக்களையும் விசாரிக்கத் தொடங்கியது. பின்னர் இவ்வழக்குகளை சீக்கிய மதத்தைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த நீதிபதி குரியன் ஜோசப், பார்சி மதத்தைச் சேர்ந்த நீதிபதி ரோஹிண்டன் பாலி நாரிமன், இந்து மதத்தைச் சேர்ந்த உதய் உமேஷ் லலித், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த நீதிபதி எஸ். அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது.

இந்த அமர்வு கடந்த மே 11 முதல் ‘முத்தலாக்’ வழக்குகளை விசாரித்து, கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில் முத்தலாக் முறை சட்ட விரோதமானது என்று அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து புதிய சட்ட முன்வடிவை கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு தயாரித்தது. “முத்தலாக்” என்று ஒரே நேரத்தில் மனைவியிடம் நேரிலோ, இ-மெயில், எஸ்.எம்.எஸ்., வாட்ஸ் அப் போன்ற மின்னணு சாதனங்கள் மூலமாகவோ தெரிவிக்கும் கணவனின் விவாகரத்து செல்லாது.

அவ்வாறு, ஒரே நேரத்தில் முத்தலாக் என்று கூறி மனைவியை விவாகரத்து செய்யும் கணவனுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதிப்படும். என்று இந்த சட்ட முன்வடிவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த வரைவு மசோதாவிற்கு மத்திய அரசு வெள்ளிக்கிழமையன்று ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், இந்த சட்ட முன்வடிவு, நடப்பு குளிர்கால கூட்டத் தொடரிலேயே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

You'r reading இ-மெயில், எஸ்எம்எஸ் மூலம் விவாகரத்து வழங்கலாமா? - புதிய சட்டம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஆட்டோவில் சென்ற ரவுடி கதற கதற வெட்டிக் கொலை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்