ஆர்.டி.சீத்தாபதி மரணம். ஸ்டாலின் நேரில் அஞ்சலி

Dmk senior leader R.D.Seethapathy expired

திமுகவில் முன்பு ஒருங்கிணைந்த சென்னை மாவட்டச் செயலாளராக இருந்த மூத்த நிர்வாகி ஆர்.டி.சீத்தாபதி காலமானார். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

சென்னை ஒரே மாவட்டமாக இருந்த போது தி.மு.க. மாவட்டச் செயலாளராக இருந்தவர் ஆர்.டி.சீத்தாபதி. உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலமானார். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று சீத்தாபதி உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர், ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘‘கட்சியின் சொத்துப் பாதுகாப்புக் குழுத் துணைத் தலைவரும், ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட தி.மு.க. முன்னாள் செயலாளருமான ஆர்.டி.சீத்தாபதி மறைவுச் செய்தி- என் இதயத்தில் வேதனைத் தீயை மூட்டியிருக்கிறது.

சென்னை மாவட்டச் செயலாளர்களான என்.வி.நடராசன், கோவிந்தசாமி,கண்ணபிரான், மணிவண்ணன், கோ.செங்குட்டுவன், இளம்பரிதி, நீலநாராயணன் ஆகியோரைத் தொடர்ந்து மாவட்டச் செயலாளராகப் பணியாற்றியவர் ஆர்.டி.சீத்தாபதி.

1974ஆம் ஆண்டு தொடங்கி, தொடர்ந்து இரண்டு முறை சென்னை மாவட்டச் செயலாளராகப் பொறுப்பேற்றுக் கட்சியின் வளர்ச்சிக்கு அரணாக விளங்கியவர். எப்படிப்பட்ட அடக்குமுறைகளையும் எதிர்த்து நின்று- கழகக் கூட்டங்களை, பேரணிகளை, போராட்டங்களை நடத்தி - சென்னையில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்தவர்.

இந்தியக் குடியரசுத் தலைவராக இருந்த இராஜேந்திரபிரசாத், பிரதமர் நேரு ஆகியோருக்கு எதிராக கறுப்புக் கொடி போராட்டம் நடத்தி சென்னை மத்திய சிறையிலும் - பாளையங்கோட்டைச் சிறையிலுமாக ஓராண்டு காலம் மிசா சிறைவாசம் அனுபவித்தவர். 2012 ஆம் ஆண்டு "கலைஞர் விருது" வழங்கி கவுரவிக்கப்பட்ட ஆர்.டி.சீத்தாபதி மறைவு, அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல, தி.மு.க.வுக்கும் பேரிழப்பு’’ என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

You'r reading ஆர்.டி.சீத்தாபதி மரணம். ஸ்டாலின் நேரில் அஞ்சலி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஓட்டு எந்திரங்களில் முறைகேடா? தேர்தல்கமிஷனுக்கு பிரணாப் எச்சரிக்கை!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்