ஒரு வழியாக முகம் மலர்ந்த மோடி, இம்ரான் கான்... கை குலுக்கி வாழ்த்தும் பரிமாறினர்

Pm Modi and imran Khan exchange pleasantries during sco submit: Pakistan foreign minister:

கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் 2 நாட்களாக நடைபெற்ற மாநாட்டில் பாராமுகமாக இருந்த இந்தியப் பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் ஒரு வழியாக கடைசி நேரத்தில் புன்னகையுடன் கைகுலுக்கி பரஸ்பரம் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர் என தகவல் வெளியாகியுள்ளது.

கிர்கிஸ்தான் தலைநகர் பிஸ்கெக் நகரில் இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு கடந்த 2 நாட்களாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த மாநாட்டின் ஆரம்பம் முதலே இந்தியப் பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆகியோரின் ஒவ்வொரு அசைவையும் அனைவரும் உற்று நோக்கி வந்தனர் என்றே கூறலாம்.

ஏனெனில் கடந்த பிப்ரவரியில் நடந்த புல்வாமா தீவிரவாத தாக்குதல், அதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்குள் ஊடுருவி இந்தியா நடத்திய விமானத் தாக்குதலால் இரு நாடுகளிடையே பதற்றம் அதிகரித்துக் காணப்படுகிறது. இந்தியாவின் பதிலடியால் பதற்றத்தில் இருக்கும் பாகிஸ்தான், பிரச்னைகளுக்கு தீர்வு காண பேச்சு நடத்துவோம் என சமாதானத்திற்கு இறங்கி வந்தாலும், இந்தியாவோ முதலில் தீவிரவாதத்தை நிறுத்துங்கள் என்று பிடிவாதம் காட்டுகிறது.

இதன் பின், பிரதமராக மோடி 2-வது முறையாக தேர்வானதற்கு வாழ்த்துச் செய்தி அனுப்பிய இம்ரான் கான், தொலைபேசியில் தொடர்பு கொண்டும் வாழ்த்து கூறினார். அதன் பின் கடந்த வாரம் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி, இரு நாட்டுப் பிரச்னைகளுக்கு தீர்வு காண பேச்சு நடத்துவோம் என்று இம்ரான்கான் மீண்டும் வலியுறுத்தினார். ஆனால் இந்தியாவின் பிடிவாதம் தொடர்கிறது.

இந்நிலையில் தான் பிஸ்கெக் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இருவரும் பங்கேற்றனர். மோடியும், இம்ரான் கானும் நேருக்கு நேர் சந்திப்பார்களா? கைகுலுக்கிக் கொள்வார்களா? புன்னகை பூப்பார்களா?தனியே பேச்சுவார்த்தை நடத்துவார்களா? என்றெல்லாம் அனைவரின் கவனம் இருவர் மீதும் பதிந்தது. ஆனால் மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியிலும், அன்று இரவு நடந்த பகட்டான விருந்து நிகழ்ச்சியிலும் பங்கேற்ற இருவரும் கடைசி வரை ஒருவரை ஒருவர் நேரில் பார்த்துக் கொள்வதை தவிர்த்தே வந்தனர். இருவரும் அமரும் போது கூட, அருகருகே அமரவில்லை.

இந்நிலையில் மாநாட்டின் முடிவு நாளான நேற்று ஒரு வழியாக இருவரும் கைகுலுக்கி, புன்னகையுடன் ஒருவரையொருவர் பரஸ்பரம் நலம் விசாரித்து வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டனர். இத்தகவலை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகம்மது குரேஷி தெரிவித்துள்ளார். அப்போது அவரிடம், இந்த கை குலுக்கலுக்கு முதலில் முன் வந்தது மோடியா ? இம்ரானா? என்ற கேள்வி எழுப்பியதற்கு, அதையெல்லாம் கூற முடியாது. இருவரும் சந்தித்து கை குலுக்கினர்... புன்னகைத்தனர்... வாழ்த்துக் கூறி நலம் விசாரித்துக் கொண்டனர் என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

மோடிக்கு வாழ்த்துக் கூறிய சீன அதிபர்..! இருநாட்டு நல்லுறவை மேம்படுத்துவது பற்றி பேச்சு..!

You'r reading ஒரு வழியாக முகம் மலர்ந்த மோடி, இம்ரான் கான்... கை குலுக்கி வாழ்த்தும் பரிமாறினர் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - துணை சபாநாயகர் பதவி கேட்கவி்ல்லை: யூகங்களுக்கு ஜெகன் முற்றுப்புள்ளி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்