அதிமுகவில் ராஜ்யசபா எம்.பி.யோகம் யாருக்கு? கடைசி நேர முட்டல் மோதல்

Rajya sabha election, Ops, EPS announcing admk candidates name Today

அதிமுக சார்பில் ராஜ்ய சபாவுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாக உள்ள நிலையில், சீட் யார்? யாருக்கு? என்பதில் கடைசி நேர முட்டல் மோதல் நடந்து வருவதாகத் தெரிகிறது.

தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா இடங்களுக்கு வரும் 18-ந் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 6 இடங்களில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு தலா 3 இடங்கள் கிடைப்பது உறுதி. இதில் திமுக சார்பில் சண்முகம், வில்சன் ஆகியோரும், கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு எம்.பி. சீட் ஒதுக்கப்பட்டு வைகோவும் போட்டியிட உள்ளனர். இன்று 3 பேரும் மனுத்தாக்கலும் செய்கின்றனர்.

ராஜ்யசபா சீட்டுக்கு அதிமுக இழுபறி நீடிப்பதால் அதிமுக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களை தேர்வு செய்வதில் பல நாட்களாக இழுபறி ஏற்பட்டு வந்த நிலையில் இன்று வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட உள்ளது. ராஜ்யசபா எம்.பி. சீட்டை கைப்பற்ற அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட கடும் போட்டிதான் வேட்பாளர் அறிவிப்புக்கு தாமதம் எனக் கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே செய்த ஒப்பந்தப்படி பாமகவுக்கு ஒரு சீட் ஒதுக்குவதா? கூடாதா? என்ற விவாதம் நீடித்ததும் ஒரு காரணம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் பாமகவுக்கு ஒரு சீட்டை ஒதுக்கிவிட்டு, ஓபிஎஸ், இபிஎஸ் கோஷ்டியில் ஆளுக்கொரு எம்.பி பதவி என்று முடிவாகியுள்ளதாம். இதில் ஓபிஎஸ் அணியில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியின் பெயர் முன்னிலையில் இருந்தாலும், மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் முட்டி மோதுவதாகத் தெரிகிறது. இதே போன்று இபிஎஸ் தரப்பில் மூத்த நிர்வாகி என்ற ரீதியில் மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் தம்பித்துரை மல்லுக்கு நிற்கிறாராம். ஆனால் அதிமுகவில் சிறுபான்மையினர் புறக்கணிக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கே எம்.பி. சீட் கொடுக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கிறதாம்.

இதனால் தம்பித்துரையை சமாளிக்க, இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவருக்கு எம்.பி. சீட் ஒதுக்க இபிஎஸ் தரப்பு முடிவெடுத்துள்ளதாம். அகில உலக எம்ஜிஆர் மன்ற பொறுப்பில் உள்ள கட்சியின் மூத்த நிர்வாகியான தமிழ் மகன் உசேன் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், முன்னாள் எம்.பி.அன்வர் ராஜாவும் கடைசிக் கட்ட முயற்சிகளில் ஈடுபட்டுள்ளாராம்.

இந்நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு வேட்பாளர்கள் பெயரை ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்து அறிவிக்க உள்ள நிலையில், யாருக்கு யோகம் என்பது கடைசி வரை சஸ்பென்சாக உள்ளது.

ராஜ்யசபா தேர்தல்; திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு... சண்முகம், வில்சன் ஆகியோருக்கு அதிர்ஷ்டம்

You'r reading அதிமுகவில் ராஜ்யசபா எம்.பி.யோகம் யாருக்கு? கடைசி நேர முட்டல் மோதல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பார்க்க வேண்டிய நாடு இன்றும் இலங்கைதான்; ரணில் மகிழ்ச்சி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்