முத்தலாக் மசோதாவுக்கு எதிர்ப்பு அதிமுக, ஜேடியு வெளிநடப்பு

Admk, JD(U) opposed Triple talaq bill in Rajya Sabha, but boycott voting

பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள், மாநிலங்களவையில் முத்தலாக் தடைச் சட்ட மசோதா மீது எதிர்ப்பு தெரிவித்து பேசி விட்டு, வாக்கெடுப்புக்கு முன்பாகவே வெளிநடப்பு செய்து விட்டன.

முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த கணவன்மார்கள், தலாக் என்று வார்த்தையை மூன்று முறை உச்சரித்து, மனைவியை விவாகரத்து செய்யலாம். இதற்கு அவர்களின் மதச் சட்டம் அனுமதி அளிக்கிறது. ஆனால், இப்படி செய்வதால் முஸ்லீம் பெண்கள் பலரும் ஆதரவற்றவர்களாகி விடுகிறார்கள் என்று கூறி, முத்தலாக் தடைச் சட்டத்தை பாஜக அரசு கொண்டு வந்தது.

முஸ்லீம் பெண்கள்(திருமணப் பாதுகாப்பு) சட்ட மசோதாவை கடந்த நாடாளுமன்றத்திலேயே மக்களவையில் நிறைவேற்றினர். அப்போது அதிமுக சார்பில் அன்வர்ராஜா எம்.பி. கடுமையாக எதிர்த்து பேசினார். இதன்பின், மாநிலங்களவையில் 13 உறுப்பினர்களை கொண்டிருந்த அதிமுக, அங்கும் மசோதாவை எதிர்த்து வாக்களிக்கப் போவதாக கூறியது.

அந்த அவையில் ஏற்கனவே பாஜகவுக்கு மெஜாரிட்டி இல்லை. மேலும், தேர்தல் நேரத்தில் முஸ்லீம் மக்களின் நம்பிக்கையை இழந்து விடக் கூடாது என்பதால், டி.ஆர்.எஸ், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் போன்ற கட்சிகளும் அந்த மசோதாவை எதிர்க்க வாய்ப்பிருந்தது. இதனால், மசோதாவை வாக்கெடுப்புக்கு விடாமல், அவையை ஒத்தி வைத்து விட்டார் மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு.

இதன் பின்னர், புதிய மக்களவை தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதால், மீண்டும் மக்களவையில் முத்தலாக் தடை சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது. இந்த முறை அதிமுகவுக்கு ஓ.பி.எஸ். மகன் ரவீந்திர குமார் மட்டுமே ஒரே எம்.பி.யாக மக்களவையில் உள்ளார். அவர் இந்தமுறை முத்தலாக் தடை சட்ட மசோதாவை வரவேற்று, ஆதரித்து பேசி விட்டார். இது அந்த கட்சிக்குள் குழப்பத்ைத ஏற்படுத்தியிருக்கிறது. அதனால்தான், அவர் பேசியது அதிமுக கருத்தல்ல, மாநிலங்களவையில் அதிமுக கருத்தை பிரதிபலிப்போம் என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் கொடுத்தார்.

இந்நிலையில், மாநிலங்களவையில் முத்தலாக் தடை சட்ட மசோதா இன்று விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படுகிறது. இதை நிறைவேற்ற விடக்கூடாது என்று காங்கிரஸ் உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கியஜனதா தளம் கட்சியே முத்தலாக் தடை சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எனவே, பாஜகவுக்கு மெஜாரிட்டி இல்லாமல் எப்படி நிறைவேற்றுவார்கள் என்று காங்கிரஸ் பதற்றத்துடன் இருக்கிறது.

இந்நிலையில், மாநிலங்களவையில் முத்தலாக் தடை சட்ட மசோதாவை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இன்று தாக்கல் செய்தார். பாஜக கூட்டணியில் உள்ள அதிமுகவும், ஐக்கிய ஜனதாதளம் கட்சியும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. மசோதாவை நாடாளுமன்ற பொறுப்புக் குழுவுக்கு அனுப்பக் கோரின. அதை அரசு ஏற்கவில்லை. அதன்பின், வாக்கெடுப்பு நடத்தும் முன்பே வெளிநடப்பு செய்து விட்டன.

அதிமுக சார்பில் நவநீதகிருஷ்ணனும், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியனும் பேசினர். எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் பேசும் போது, ‘‘இந்த மசோதாவில் சில பிரிவுகள் மீது எங்களுக்கு உடன்பாடு இல்லை. அதனால், இதை நீக்குவது குறித்து ஆய்வு செய்ய பொறுப்புக் குழுவுக்கு அனுப்ப வேண்டும்’’ என்றார். இதே போல் நவநீதகிருஷ்ணனும் வலியுறுத்தினார். இதன்பின், மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

ஐக்கிய ஜனதா தளம் உறுப்பினர் பசிஷ்த நாராயணன் சிங் பேசுகையில், ‘‘நாங்கள் மகாத்மா காந்தி, ராம் மனோகர் லோகியா, ஜெயப்பிரகாஷ் நாராயண் போன்ற தலைவர்களை பின்பற்றுபவர்கள். எங்களுக்கு இந்த மசோதா மீது உடன்பாடில்லை. இதை எதிர்க்கிறோம்’’ என்று கூறினார். அதைத் தொடர்ந்து ஐக்கிய ஜனதா தளம் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

இவர்கள் வெளிநடப்பு செய்ததும் ஒரு வகையில் பாஜகவுக்கு உதவி செய்தது போலாகும். காரணம், இவர்கள் எதிர்த்து வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்வதால் மெஜாரிடிக்கான எண்ணிக்கை குறைந்து விடுகிறது. இதனால், மசோதாவை நிறைவேற்ற பாஜக அரசுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

திரிணாமுல் காங். எம்.பி.க்கு சம்மன் அனுப்பியது சி.பி.ஐ; எப்போது தெரியுமா?

You'r reading முத்தலாக் மசோதாவுக்கு எதிர்ப்பு அதிமுக, ஜேடியு வெளிநடப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஜெ.தீபா அம்மாவுக்கு என்னாச்சு..? அரசியலுக்கு முழுக்காம்...! தொந்தரவு செய்தால் போலீசுக்கு போவாராம்.. உஷார்..!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்