சர்வதேச கால்பந்து உலகக்கோப்பை: தைபே அணியை துவம்சம் செய்த இந்தியா

இந்தியா, கென்யா, தைபே உள்ளிட்ட பல உலக நாடுகள் பங்கேற்கும் சர்வதேச கால்பந்து உலகக் கோப்பை 2018 தொடர் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது.

நேற்று மும்பையில் தொடங்கிய முதல் போட்டியில் இந்தியாவும், சீன தைபே அணியும் மோதின. இந்தப் போட்டியில் தைபே அணி, ஒரு கோல் கூட அடிக்காத நிலையில், இந்திய அணி 5 கோல்கள் அடித்து கலக்கியது.

இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் இந்தியக் கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி போட்ட மூன்று கோல்கள்தான். சேத்ரியின் மூன்று கோல்கள் போதாதென்று உதான்டா சிங் மற்றும் பிரனாய் ஹெல்டர் ஆகிய இருவரும் தங்கள் பங்குக்கு தலா ஒரு கோல் போட்டனர்.

இந்தியாவின் ஆக்ரோஷமான ஆட்டமும், கோல் அடிக்க பந்தை போஸ்ட் நோக்கி எடுத்துச் சென்ற லாவகமும் தான், மாபெரும் வெற்றிக்குக் காரணமாக இருந்தது. இந்தியாவின் இந்த தெறி ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் களத்தில் தவித்தது தைபே. இறுதி வரை அவர்கள் கோல் போட எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் மட்டுமே முடிந்தன.

சர்வதேசக் கோப்பையின் முதல் போட்டியிலேயே அதகளமான ஆட்டத்தை இந்திய அணி வெளிப்படுத்தி உள்ளதால், விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் இந்த கோப்பை குறித்த ஆர்வம் அதிகமாகி உள்ளது. தனது அடுத்த போட்டியை கென்யாவை எதிர்த்து விளையாட உள்ளது இந்தியா.

அந்தப் போட்டி வருகிற 4- ம் தேதி நடக்க உள்ளது. அதிலும் தனது அதிரடி ஆன ஆட்டத்தை இந்தியா தொடரும் என்றே பல விளையாட்டு ஆர்வலர்களும் கருதுகின்றனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading சர்வதேச கால்பந்து உலகக்கோப்பை: தைபே அணியை துவம்சம் செய்த இந்தியா Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழகத்தில் நிபா வைரஸ் அறிகுறியா? சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்