பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐ விசாரிப்பது எப்போது....கேள்வி கேட்ட உயர் நீதிமன்றம்

Pollachi sexual case, high court questions tn govt on delay of CBI probe

பொள்ளாச்சி வழக்கை சிபிஐயிடம் ஒப்படைப்பதாக அறிவித்துவிட்டு சிபிசிஐடி போலீஸ் தொடர்ந்து விசாரித்து வருவது ஏன்? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. சிபிஐக்கு மாற்றம் செய்வதற்கான நடைமுறைகள் நடந்து வருவதாக தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக புகார்கள் எழுந்த நிலையில் முதலில் உள்ளூர் போலீசிடம் இருந்து சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப் பட்டது. அதன்பின் வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீசே தொடர்வதுடன் சந்தேகப்படுவர்களை விசாரணைக்கு ஆஜராகுமாறும் சம்மன் அனுப்பி வருகிறது.

இதன்படி பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக மார்ச் 30-ந் தேதி நேரில் ஆஜராகும்படி நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு, சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். இதை எதிர்த்து நக்கீரன் கோபால், உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, பொள்ளாச்சி வழக்கை சிபிஐ.க்கு மாற்றி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கு எப்போது சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும்? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கை சிபிஐ வசம் ஒப்படைப்பதற்கான நடைமுறைகள் நடைபெற்று வருவதாகவும், அதுவரையில் சிபிசிஐடி தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, வருகிற ஏப்ரல் ஒன்றாம் தேதி சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக நக்கீரன் கோபாலுக்கு, அனுமதி அளித்து, நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார்.

You'r reading பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐ விசாரிப்பது எப்போது....கேள்வி கேட்ட உயர் நீதிமன்றம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஐபோன் பயனர்களுக்கு ஜிமெயிலில் ஸ்வைப்பிங் வசதி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்