சிறுநீரகத்திற்கு ரூ.3 கோடி மிசோரம் கும்பல் மோசடி

Mizoram gang cheated erode people in the name of hospital

சிறுநீரகம் தானம் செய்தால் மூன்று கோடி ரூபாய் தருவதாகக் கூறி, பிரபல மருத்துவமனை பெயரில் மிசோரம் கும்பல் ஒன்று பலரை மோசடி செய்துள்ளது.

ஈரோடு சம்பத்நகரில் உள்ள தனியார் மருத்துவமனை பெயரில் துவங்கப்பட்ட பேஸ்புக் கணக்கில் ஒரு விளம்பரம் வெளியானது. அதில், சில நோயாளிகளுக்கு சிறுநீரகம் தேவைப்படுவதாகவும், தானம் அளிப்பவர்களுக்கு ரூ.3 கோடி தரப்படும் என்றும் அதில் கூறப்பட்டது. தானம் தர முன்வருபவர்கள் குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு ரூ.7,500 முன்பணம் அனுப்பி வைக்க வேண்டுமென்றும் கூறப்பட்டிருந்தது. இதை நம்பி, ஈரோட்டிலேயே 20க்கும் மேற்பட்டவர்கள் தலா ரூ.7,500 அனுப்பியுள்ளார்கள்.

ஆனால், அதற்கு பின், அந்த மருத்துவமனையில் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்றதும், மருத்துவமனையை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர். அப்போதுதான், அந்த பேஸ்புக் போலியானது என்று தெரிய வந்தது. இதையடுத்து, அந்த மருத்துவமனை சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது.

இதன்பின், போலீசார் நடத்திய விசாரணையில் அந்த மோசடிக் கும்பல் மிசோரத்தில் இருந்து வங்கி மூலம் பணத்தை மோசடி செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது. மேலும், அவர்கள் அங்கு தொடங்கியுள்ள அந்த மோசடி வங்கிக் கணக்கில் 500க்கும் மேற்பட்டவர்கள் பணம் டெபாசிட் செய்து ஏமாந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, அந்த கும்பலை கண்டுபிடிக்க மிசோரம் போக போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

You'r reading சிறுநீரகத்திற்கு ரூ.3 கோடி மிசோரம் கும்பல் மோசடி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்