அத்திவரதரை நள்ளிரவில் தரிசித்தார் ரஜினி

rajini, latha rajini prays atthivaradar in midnight

காஞ்சிபுரத்திற்கு நேற்று நள்ளிரவில் தனது மனைவி லதாவுடன் வருகை தந்த ரஜினிகாந்த், அத்திவரதரை தரிசித்தார். அத்திவரதர் தரிசனம் நாளை மறுநாளுடன் முடிவடைகிறது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் தரிசன பெரு விழா, ஜூலை 1ம் தேதி தொடங்கியது. கடந்த 31ம் தேதி வரை அத்திவரதர் சயன கோலத்தில் காட்சி அளித்தார். ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நின்ற கோலத்தில் தினம் ஒரு பட்டாடை உடுத்தி, மலர் அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சி தந்து வருகிறார்.

அத்திவரதர் தரிசனத்தின் 44-வது நாளான இன்று இளம் பச்சை மற்றும் இளம் சிவப்பு நிற பட்டாடை அணிந்து, மனோரஞ்சித மாலை, துளசி மாலைகளுடன் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். பக்ரீத் விடுமுறை நாளான கடந்த திங்கட்கிழமை மட்டும் 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திரண்டதால் காஞ்சி நகரமே திக்குமுக்காடிப் போனது. அடுத்த 2 நாட்களிலும் மூன்று, மூன்றரை லட்சம் பக்தர்கள் திரண்டனர்.

இன்னும் 2 நாட்களே இந்த வைபவம் நடைபெற உள்ள நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் காஞ்சிபுரத்திற்கு வந்தனர். விவிஐபி நுழைவாயிலில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சப்கலெக்டர் சரவணன் காத்திருந்து ரஜினியை வரவேற்றார். பின்பு, ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த் ஆகியோர் கோயிலுக்குள் வசந்த மண்டபத்தில் வீற்றிருக்கும் அத்திவரதரை தரிசித்தனர். ரஜினிகாந்துக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. அத்திவரதர் படம் மற்றும் பிரசாதங்கள் அளிக்கப்பட்டது.

அரை மணிநேரத்திற்குள் அத்திவரதரை தரிசித்துவிட்டு ரஜினியும், லதாவும் புறப்பட்டனர். முன்னதாக, அவர்களை வரவேற்க ரசிகர் மன்ற பிரமுகர்களும் வந்திருந்தனர்.

You'r reading அத்திவரதரை நள்ளிரவில் தரிசித்தார் ரஜினி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ராகுல் காந்திக்கு காஷ்மீர் ஆளுநர் அழைப்பு விடுத்தது வெற்று பிரச்சாரம் ; ப.சிதம்பரம் சாடல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்