மு.க.ஸ்டாலின், ஓ.பி.எஸ்.சுக்கு சி.ஆர்.பி.எப் பாதுகாப்பு வாபஸ் மத்திய அரசு திடீர் முடிவு

Centre withdraw CRPF cover to Stalin and O Pannirselvam.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அளிக்கப்பட்டு வந்த சி.ஆர்.பி.எப். போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது.

நாட்டின் மிகமிக முக்கியமான பிரமுகர்களுக்கு(வி.வி.ஐ.பி) சிறப்பு பாதுகாப்பு படை(எஸ்.பி.ஜி) பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக முக்கிய நபர்களுக்கும், தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ளவர்களுக்கும் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு(சி.ஆர்.பி.எப்) வழங்கப்படுகிறது. இந்த பாதுகாப்பு நடைமுறையில் இசட் பிளஸ், ஒய் என்று சில பிரிவுகள் உள்ளன. அதற்கேற்ப போலீசாரின் எண்ணிக்கையும், துப்பாக்கிகளும் இருக்கும்.

தமிழகத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான ஸ்டாலினுக்கு கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் இருந்து இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அவர் துணை முதல்வராக இருந்த காலத்தில் அவருக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ளதாக கூறி, அந்த பாதுகாப்பு வழங்கப்பட்டது.

அதே போல், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலாவுக்கு எதிராக இவர் தர்மயுத்தம் நடத்திய காலத்தில் மத்திய பாஜக அரசின் ஆசி இருந்தது. அப்போது இவரது அணியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. மைத்ரேயன் உள்ளிட்ட சிலர், மத்திய உள்துறை அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து, இந்த ஒய் பிரிவு பாதுகாப்பு தரப்பட்டது.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் அவ்வப்போது இந்த வி.ஐ.பி. பாதுகாப்புகளை மறு ஆய்வு செய்யும். அதன்படி, தற்போது மறு ஆய்வு செய்ததில், ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு வழங்கப்படும் சி.ஆர்.பி.எப் பாதுகாப்பை விலக்கிக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இனிமேல் இவர்களுக்கு தமிழக போலீசார் பாதுகாப்பு அளிப்பார்கள்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991ல் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட போது, அவரது குடும்பத்தினருக்கு எஸ்.பி.ஜி. பாதுகாப்பு அளிக்கப்பட்டது. அதன்படி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் எஸ்.பி.ஜி. பாதுகாப்பு வளையத்தில் இருந்தனர். சமீபத்தில் அவர்களுக்கு எஸ்.பி.ஜி. பாதுகாப்பை மத்திய அரசு வாபஸ் பெற்று விட்டு, சி.ஆர்.பி.எப் பாதுகாப்பு அளித்தது குறிப்பிடத்தக்கது.

You'r reading மு.க.ஸ்டாலின், ஓ.பி.எஸ்.சுக்கு சி.ஆர்.பி.எப் பாதுகாப்பு வாபஸ் மத்திய அரசு திடீர் முடிவு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஈரான் ஏவுகணை தாக்குதலால் தான் விமானம் விபத்துக்குள்ளானதா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்