உடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யா தந்தை விடுதலை., 5 பேருக்கு தூக்கு ரத்து..

Kausalya father set free in Udumalai Shankar murder case. Death sentence reduced to life for 5 persons.

உடுமலை சங்கர் படுகொலை வழக்கில், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி விடுதலை செய்யப்பட்டார். மற்ற 5 பேருக்கு மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த கவுசல்யா என்ற இளம்பெண், வேறொரு ஜாதியைச் சேர்ந்த சங்கர் என்பவரைக் காதலித்தார். இவர்களது காதலுக்கு கவுசல்யாவின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 2015ம் ஆண்டில் பெற்றோரின் கடும் எதிர்ப்பையும் மீறி, சங்கரை கவுசல்யா திருமணம் செய்து கொண்டார். இது கவுசல்யாவின் பெற்றோருக்கு கடும் ஆத்திரத்தை மூட்டியது.


இதன்பின், 2016ம் ஆண்டு மார்ச் 13ம் தேதியன்று உடுமலைப்பேட்டை பேருந்து நிலையம் அருகே ஒரு கும்பல் சூழ்ந்து கொண்டு வீச்சரிவாளால் சரமாரியாக வெட்டியது. அதில் கவுசல்யா வெட்டுப்பட்டு கீழே விழுந்தார். அப்போது அந்த கும்பல் அவரை விட்டுவிட்டு, சங்கரைச் சரமாரியாக வெட்டினர். ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்த சங்கர் அதே இடத்தில் இறந்தார். பலத்த காயங்களுடன் உயிர் தப்பிய கவுசல்யா, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பட்டப்பகலில் நடந்த இந்த படுகொலைச் சம்பவம், அப்பகுதிகளில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்தது. இந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சங்கர் படுகொலை வழக்கில் கடந்த 2017 டிசம்பரில் திருப்பூர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில் கவுசல்யாவின் தந்தை உள்ளிட்ட 6 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து, அவர்கள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.


இந்த அப்பீல் வழக்கில் நீதிபதிகள் சத்தியநாராயணன், நிர்மல் குமார் ஆகியோர் இன்று தீர்ப்பு வழங்கினர். இதில், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி விடுதலை செய்யப்பட்டார். மற்ற 5 பேருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைத்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

You'r reading உடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யா தந்தை விடுதலை., 5 பேருக்கு தூக்கு ரத்து.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இந்தியாவில் ஒரே நாளில் 15,000 பேருக்கு கொரோனா..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்